திருச்சுழியல்:

<– பாண்டிய நாடு

(குறிப்பு: சுந்தரரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)
 

(சுந்தரர் தேவாரம்):

(1)
ஊனாய், உயிர் புகலாய், அகலிடமாய், முகில் பொழியும்
வானாய் வருமதியாய் விதிவருவான் இடம், பொழிலின்
தேனாதரித்திசை வண்டினம் மிழற்றும் திருச்சுழியல்
நானாவிதம் நினைவார் தமைநலியார் நமன் தமரே
(2)
தண்டேர் மழுப்படையான், மழவிடையான், எழு கடல்நஞ்சு
உண்டே, புரம்எரியச் சிலை வளைத்தான் இமையவர்க்காத்
திண்தேர் மிசை நின்றான், அவன் உறையும் திருச்சுழியல்
தொண்டே செயவல்லார் அவர் நல்லார், துயர் இலரே
(3)
கவ்வைக்கடல் கதறிக்கொணர் முத்தம் கரைக்கேற்றக்
கொவ்வைத் துவர் வாயார் குடைந்தாடும் திருச்சுழியல்
தெய்வத்தினை வழிபாடு செய்தெழுவார் அடிதொழுவார்
அவ்வத்திசைக்கு அரசாகுவர், அலராள் பிரியாளே
(4)
மலையான் மகள் மடமாது இடம்ஆகத்தவன், மற்றுக்
கொலை யானையின் உரிபோர்த்த எம்பெருமான் திருச்சுழியல்
அலையார் சடையுடையான் அடிதொழுவார் பழுதுள்ளம்
நிலையார் திகழ்புகழால் நெடு வானத்துயர்வாரே
(5)
உற்றான் நமக்கு, உயரும் மதிச்சடையான், புலனைந்தும்
செற்றார் திருமேனிப் பெருமான்ஊர் திருச்சுழியல்
பெற்றான் இனிதுறையத் திறம்பாமைத் திருநாமம்
கற்றாரவர் கதியுள்செல்வர் ஏத்தும்அது கடனே
(6)
மலந்தாங்கிய பாசப் பிறப்பறுப்பீர், துறைக்கங்கைச்
சலந்தாங்கிய முடியான் அமர்ந்திடமாம் திருச்சுழியல்
நிலந்தாங்கிய மலரால் கொழும் புகையால் நினைந்தேத்தும்
தலந்தாங்கிய புகழால்மிகு தவமாம் சதுராமே
(7)
சைவத்த செவ்வுருவன், திருநீற்றன், உரும்ஏற்றன்
கை வைத்தொரு சிலையால் அரண்மூன்றும் எரி செய்தான்
தெய்வத்தவர் தொழுதேத்திய குழகன் திருச்சுழியல்
மெய்வைத்தடி நினைவார் வினைதீர்தல் எளிதன்றே
(8)
பூவேந்திய பீடத்தவன் தானும், மடல் அரியும்
கோவேந்திய வினயத்தொடு குறுகப் புகலறியார்
சேவேந்திய கொடியானவன் உறையும் திருச்சுழியல்
மாவேந்திய கரத்தான் எம சிரத்தான் தனது அடியே
(9)
கொண்டாடுதல் புரியா வரு தக்கன் பெருவேள்வி
செண்டாடுதல் புரிந்தான் திருச்சுழியல் பெருமானைக்
குண்டாடிய சமணாதர்கள் குடைச்சாக்கியர் அறியா
மிண்டாடிய அது செய்ததுவானால் வருவிதியே
(10)
நீருர்தரு நிமலன்திரு மலையார்க் கயலருகே
தேரூர்தரும் அரக்கன்சிரம் நெரித்தான் திருச்சுழியல்
பேரூரென உறைவான் அடிப்பெயர் நாவலர் கோமான்
ஆரூரன் தமிழ்மாலை பத்தறிவார் துயரிலரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page