திருக்காளத்தி – சுந்தரர் தேவாரம்:

<– திருக்காளத்தி

(1)
செண்டாடும் விடையாய், சிவனேஎன் செழுஞ்சுடரே
வண்டாரும் குழலாள் உமைபாகம் மகிழ்ந்தவனே
கண்டார் காதலிக்கும் கணநாதனெம் காளத்தியாய்
அண்டா உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே
(2)
இமையோர் நாயகனே, இறைவா என் இடர்த்துணையே
கமையார் கருணையினாய், கருமாமுகில் போல் மிடற்றாய்
உமையோர் கூறுடையாய், உருவே, திருக்காளத்தியுள்
அமைவே, உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே
(3)
படையார் வெண்மழுவா, பகலோன் பல் உகுத்தவனே
விடையார் வேதியனே, விளங்கும் குழைக் காதுடையாய்
கடையார் மாளிகைசூழ் கணநாதனெம் காளத்தியாய்
உடையாய் உன்னையல்லால் உகந்தேத்த மாட்டேனே
(4)
மறிசேர் கையினனே, மதமாஉரி போர்த்தவனே
குறியே, என்னுடைய குருவே, உன் குற்றேவல் செய்வேன்
நெறியே நின்றடியார் நினைக்கும் திருக்காளத்தியுள்
அறிவே உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே
(5)
செஞ்சேலன்ன கண்ணார் திறத்தே கிடந்துற்றலறி
நஞ்சேன் நானடியேன் நலமொன்றறியாமையினால்
துஞ்சேன் நானொருகால் தொழுதேன் திருக்காளத்தியாய்
அஞ்சாதுன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே
(6)
பொய்யவனாய் அடியேன் புகவே நெறியொன்றறியேன்
செய்யவனாகி வந்திங்கிடரானவை தீர்த்தவனே
மெய்யவனே, திருவே விளங்கும் திருக்காளத்திஎன்
ஐய, நுன்றன்னை அல்லால் அறிந்தேத்த மாட்டேனே
(7)
கடியேன் காதன்மையால் கழல்போதறியாத என்னுள்
குடியாக் கோயில்கொண்ட குளிர் வார்சடை எம்குழகா
முடியால் வானவர்கள் முயங்கும் திருக்காளத்தியாய்
அடியேன் உன்னையல்லால் அறியேன் மற்றொருவரையே
(8)
நீறார் மேனியனே, நிமலா, நினையன்றி மற்றுக்
கூறேன் நாவதனால், கொழுந்தே என் குணக்கடலே
பாறார் வெண்தலையில் பலி கொண்டுழல் காளத்தியாய்
ஏறே உன்னையல்லால் இனி ஏத்த மாட்டேனே
(9)
தளிர்போல் மெல்லடியாள் தனை ஆகத்தமர்ந்தருளி
எளிவாய் வந்தென் உள்ளம் புகுதவல்ல எம்பெருமான்
களியார் வண்டறையும் திருக்காளத்தி உள்ளிருந்த
ஒளியே, உன்னையல்லால் இனியொன்றும் உணரேனே
(10)
காரூரும் பொழில்சூழ் கணநாதனெம் காளத்தியுள்
ஆரா இன்னமுதை அணி நாவலாரூரன் சொன்ன
சீருர் செந்தமிழ்கள் செப்புவார் வினையாயின போய்ப்
பேரா விண்ணுலகம் பெறுவார் பிழைப்பொன்றிலரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page