(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)
சம்பந்தர் தேவாரம்:
(1)
பொன் திரண்டன்ன புரிசடை புரளப், பொருகடல் பவளமொடழல் நிறம் புரையக்
குன்றிரண்டன்ன தோளுடைய கலம்குலாய வெண்ணூலொடு கொழும் பொடிஅணிவர்
மின்திரண்டன்ன நுண்ணிடை அரிவை மெல்லியலாளைஓர் பாகமாப் பேணி
அன்றிரண்டுருவமாய எம்அடிகள் அச்சிறுபாக்கமதாட்சி கொண்டாரே
(2)
தேனினும் இனியர், பாலன நீற்றர், தீங்கரும்பனையர், தம் திருவடிதொழுவார்
ஊன் நயந்துருக உவகைகள் தருவார், உச்சி மேல்உறைபவர், ஒன்றலாதூரார்
வானகம்இறந்து வையகம்வணங்க வயங்கொள நிற்பதோர் வடிவினை உடையார்
ஆனையின் உரிவை போர்த்த எம்அடிகள் அச்சிறுபாக்கமதாட்சி கொண்டாரே
(3)
காரிருள் உருவ மால்வரை புரையக் களிற்றினதுருவு கொண்டு, அரிவை மேலோடி
நீருரு மகளை நிமிர்சடைத் தாங்கி, நீறணிந்தேறுகந்தேறிய நிமலர்
பேரருளாளர், பிறவியில் சேரார், பிணியிலர், கேடிலர், பேய்க்கணம் சூழ
ஆரிருள்மாலைஆடும் எம்அடிகள் அச்சிறுபாக்கமதாட்சி கொண்டாரே
(4)
மைம்மலர்க் கோதை மார்பினர் எனவும், மலைமகள் அவளொடு மருவினர் எனவும்
செம்மலர்ப் பிறையும் சிறையணி புனலும் சென்னிமேல் உடையர், என்சென்னிமேல் உறைவார்
தம்மலரடி ஒன்ற அடியவர் பரவத், தமிழ்ச் சொலும் வடசொலும் தாள்நிழல்சேர
அம்மலர்க் கொன்றை அணிந்த எம்அடிகள் அச்சிறுபாக்கமதாட்சி கொண்டாரே
(5)
விண்ணுலா மதியம் சூடினர் எனவும், விரிசடையுள்ளது வெள்ளநீர் எனவும்
பண்ணுலா மறைகள் பாடினர் எனவும், பலபுகழ்அல்லது பழியிலர் எனவும்
எண்ணலாகாத இமையவர் நாளும்ஏத்த, அரவங்களோடெழில் பெறநின்ற
அண்ணலார் ஊர்தியேறும் எம்அடிகள் அச்சிறுபாக்கமதாட்சி கொண்டாரே
(6)
நீடிரும் சடைமேல் இளம்பிறை துலங்க, நிழல்திகழ் மழுவொடு நீறுமெய்பூசித்
தோடொரு காதினில் பெய்து, வெய்தாய சுடலையில் ஆடுவர், தோல்உடையாகக்
காடரங்காகக் கங்குலும் பகலும் கழுதொடு பாரிடம் கைதொழுதேத்த
ஆடரவாட ஆடும் எம்அடிகள் அச்சிறுபாக்கமதாட்சி கொண்டாரே
(7)
ஏறும்ஒன்றேறி, நீறுமெய்பூசி, இளங்கிளை அரிவையொடு ஒருங்குடனாகிக்
கூறும்ஒன்றருளிக் கொன்றையந்தாரும், குளிரிள மதியமும், கூவிளமலரும்
நாறு மல்லிகையும், எருக்கொடு முருக்கு மகிழ் இளவன்னியும் இவைநலம் பகர
ஆறுமோர் சடைமேலணிந்த எம்அடிகள் அச்சிறுபாக்கமதாட்சி கொண்டாரே
(8)
கச்சும் ஒள்வாளும் கட்டிய உடையர், கதிர்முடி சுடர்விடக் கவரியும் குடையும்
பிச்சமும் பிறவும் பெண்ணணங்காய பிறைநுதலவர் தமைப் பெரியவர் பேணப்
பச்சமும் வலியும் கருதிய அரக்கன் பருவரையெடுத்த திண்தோள்களை அடர்வித்து
அச்சமும் அருளும் கொடுத்த எம்அடிகள் அச்சிறுபாக்கமதாட்சி ஆட்சிகொண்டாரே
(9)
நோற்றலாரேனும் வேட்டலாரேனும், நுகர்புகர் சாந்தமொடு ஏந்திய மாலைக்
கூற்றலாரேனும், இன்னவாறென்றும் எய்தலாகாததொர் இயல்பினை உடையார்
தோற்றலார் மாலு நான்முகமுடைய தோன்றலும் அடியொடு முடியுறத் தங்கள்
ஆற்றலால் காணாராய எம்அடிகள் அச்சிறுபாக்கமதாட்சி ஆட்சிகொண்டாரே
(10)
வாதுசெய் சமணும், சாக்கியப் பேய்கள், நல்வினை நீக்கிய வல்வினையாளர்
ஓதியும் கேட்டும் உணர்வினை இலாதார், உள்கல்ஆகாததோர் இயல்பினை உடையார்
வேதமும்வேத நெறிகளுமாகி விமலவேடத்தொடு கமல மாமதிபோல்
ஆதியும் ஈறுமாய எம்அடிகள் அச்சிறுபாக்கமதாட்சி ஆட்சிகொண்டாரே
(11)
மைச்செறி குவளை தவளை வாய்நிறைய மதுமலர்ப் பொய்கையில் புதுமலர் கிழியப்
பச்சிறவெறி வயல் வெறிகமழ் காழிப்பதியவர் அதிபதி கவுணியர் பெருமான்
கைச்சிறு மறியவன் கழலலால் பேணாக் கருத்துடை ஞானசம்பந்தன் தமிழ்கொண்டு
அச்சிறுபாக்கத்தடிகளை ஏத்தும் அன்புடைஅடியவர் அருவினை இலரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...