(குறிப்பு: சுந்தரரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)
சுந்தரர் தேவாரம்:
(1)
தேனெய் புரிந்துழல் செஞ்சடை எம்பெருமாதிடம், திகழ் ஐங்கணையக்
கோனை எரித்த எரியாடி இடம், குலவான திடம் குறையா மறையா
மானை இடத்ததொர் கையன் இடம், மதமாறு படப்பொழியும் மலைபோல்
ஆனையுரித்த பிரானதிடம், கலிக்கச்சி அனேகதங்காவதமே
(2)
கூறு நடைக் குழிகண் பகுவாயன பேய் உகந்தாட, நின்றோரியிட
வேறுபடக் குடகத் திலைஅம்பலவாணன் நின்றாடல் விரும்பும்இடம்
ஏறு விடைக்கொடி எம்பெருமான், இமையோர் பெருமான், உமையாள் கணவன்
ஆறு சடைக்குடை அப்பன்இடம் கலிக்கச்சி அனேகதங்காவதமே
(3)
கொடிகளிடைக் குயில் கூவுமிடம், மயில்ஆலும் இடம், மழுவாளுடைய
கடிகொள் புனற்சடை கொண்ட நுதல் கறைக்கண்டன் இடம், பிறைத் துண்டமுடிச்
செடிகொள் வினைப்பகை தீரும்இடம், திருவாகும் இடம், திருமார்பகலத்து
அடிகள் இடம், அழல் வண்ணன் இடம் கலிக்கச்சி அனேகதங்காவதமே
(4)
கொங்கு நுழைத்தன வண்டறை கொன்றையும் கங்கையும் திங்களும் சூடுசடை
மங்குல்நுழை மலைமங்கையை நங்கையைப் பங்கினில் தங்க உவந்தருள்செய்
சங்கு குழைச் செவி கொண்டருவித் திரள்பாய வியர்த்தழல் போலுடைத்தாம்
அங்கை மழுத்திகழ் கையன் இடம் கலிக்கச்சி அனேகதங்காவதமே
(5)
பைத்த படத்தலை ஆடரவம் பயில்கின்ற இடம், பயிலப் புகுவார்
சித்தம் ஒருநெறி வைத்த இடம், திகழ்கின்ற இடம், திருவான் அடிக்கே
வைத்த மனத்தவர் பத்தர் மனங்கொள வைத்த இடம், மழுவாளுடைய
அத்தன் இடம், அழல் வண்ணன் இடம் கலிக்கச்சி அனேகதங்காவதமே
(6)
தண்டமுடைத் தருமன்தமர் என் தமரைச்செயும் வன்துயர் தீர்க்கும் இடம்
பிண்டமுடைப் பிறவித்தலை நின்று நினைப்பவர் ஆக்கையை நீக்குமிடம்
கண்டமுடைக் கருநஞ்சை நுகர்ந்த பிரானதிடம், கடல் ஏழுகடந்து
அண்டமுடைப் பெருமானதிடம் கலிக்கச்சி அனேகதங்காவதமே
(7)
கட்டு மயக்கமறுத்தவர் கைதொழுதேத்தும் இடம், கதிரோர் ஒளியால்
விட்ட இடம், விடையூர்தி இடம், குயிற்பேடை தன் சேவலொடு ஆடும்இடம்
மட்டு மயங்கி அவிழ்ந்த மலர் ஒருமாதவியோடு மணம்புணரும்
அட்ட புயங்கப் பிரானதிடம் கலிக்கச்சி அனேகதங்காவதமே
(8)
புல்லி இடந்தொழுதுய்தும் எனாதவர் தம்புர மூன்றும் பொடிப்படுத்த
வில்லி இடம், விரவாதுயிர் உண்ணும் வெங்காலனைக் கால்கொடு வீந்தவியக்
கொல்லி இடம், குளிர் மாதவி மவ்வல் குரா வகுளம் குருக்கத்தி புன்னை
அல்லியிடைப் பெடை வண்டுறங்கும் கலிக்கச்சி அனேகதங்காவதமே
(9)
சங்கையவர் புணர்தற்கரியான், தளவே நகையாள் தவிரா மிகுசீர்
மங்கையவள் மகிழச் சுடுகாட்டிடை நட்ட நின்றாடிய சங்கரன், எம்
அங்கையவன், அனலேந்துபவன், கனல் சேரொளி அன்னதொர் பேரகலத்து
அங்கையவன் உறைகின்ற இடம் கலிக்கச்சி அனேகதங்காவதமே
(10)
வீடு பெறப்பல ஊழிகள் நின்று நினைக்கும் இடம், வினை தீரும்இடம்
பீடு பெறப் பெரியோரதிடம், கொண்டு மேவினர் தங்களைக் காக்கும்இடம்
பாடுமிடத்தடியான் புகழ்ஊரன் உரைத்த இம்மாலைகள் பத்தும் வல்லார்
கூடும் இடம், சிவலோகன் இடம் கலிக்கச்சி அனேகதங்காவதமே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...