திருக்கச்சூர்:

(குறிப்பு: சுந்தரரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

சுந்தரர் தேவாரம்:

(1)
முதுவாய் ஓரிகதற முதுகாட்டெரி கொண்டாடல் முயல்வானே
மதுவார் கொன்றைப் புதுவீ சூடும் மலையான்மகள் தன் மணவாளா
கதுவாய்த் தலையில் பலிநீ கொள்ளக் கண்டால் அடியார் கவலாரே
அதுவே ஆமாறிதுவோ கச்சூர் ஆலக்கோயில் அம்மானே
(2)
கச்சேர் அரவொன்றரையில் அசைத்துக்
கழலும் சிலம்பும் கலிக்கப் பலிக்கென்று
உச்சம் போதா ஊரூர் திரியக்
கண்டால் அடியார் உருகாரே
இச்சைஅறியோம் எங்கள் பெருமான்
ஏழேழ் பிறப்பும் எனைஆள்வாய்
அச்சம் இல்லாக் கச்சூர் வடபால்
ஆலக்கோயில் அம்மானே
(3)
சாலக் கோயில் உள, நின் கோயில்
அவைஎன் தலைமேல் கொண்டாடி
மாலைத் தீர்ந்தேன், வினையும் துரந்தேன்
வானோர் அறியா நெறியானே
கோலக் கோயில் குறையாக் கோயில்
குளிர் பூங்கச்சூர் வடபாலை
ஆலக்கோயில் கல்லால் நிழற்கீழ்
அறங்கள் உரைத்த அம்மானே
(4)
விடையும் கொடியும் சடையும் உடையாய்
மின்னேர் உருவத்தொளியானே
கடையும் புடைசூழ் மணிமண்டபமும்
கன்னி மாடம் கலந்தெங்கும்
புடையும் பொழிலும் புனலும் தழுவிப்
பூமேல் திருமாமகள் புல்கி
அடையும் கழனிப் பழனக் கச்சூர்
ஆலக்கோயில் அம்மானே
(5)
மேலை விதியே விதியின் பயனே
விரவார் புரமூன்றெரி செய்தாய்
காலை எழுந்து தொழுவார் தங்கள்
கவலை களைவாய் கறைக்கண்டா
மாலை மதியே மலைமேல் மருந்தே
மறவேன் அடியேன் வயல்சூழ்ந்த
ஆலைக் கழனிப் பழனக் கச்சூர்
ஆலக்கோயில் அம்மானே
(6)
பிறவாய் இறவாய் பேணாய் மூவாய்
பெற்றமேறிப் பேய்சூழ்தல்
துறவாய் மறவாய் சுடுகாடென்றும்
இடமாக் கொண்டு நடமாடி
ஒறுவாய்த் தலையில் பலிநீ கொள்ளக்
கண்டால் அடியார் உருகாரே
அறவே ஒழியாய் கச்சூர் வடபால்
ஆலக்கோயில் அம்மானே
(7)
பொய்யே உன்னைப் புகழ்வார் புகழ்ந்தால்
அதுவும் பொருளாக் கொள்வானே
மெய்யே எங்கள் பெருமான் உன்னை
நினைவார் அவரை நினை கண்டாய்
மையார் தடங்கண் மடந்தை பங்கா
கங்கார் மதியம் சடைவைத்த
ஐயா செய்யாய் வெளியாய் கச்சூர்
ஆலக்கோயில் அம்மானே
(8)
ஊனைப் பெருக்கி உன்னை நினையாதொழிந்தேன், செடியேன், உணர்வில்லேன்
கானக் கொன்றை கமழ மலரும் கடிநாறுடையாய் கச்சூராய்
மானைப் புரையும் மடமென் நோக்கி மடவாள் அஞ்ச மறைத்திட்ட
ஆனைத்தோலாய் ஞானக் கண்ணாய் ஆலக்கோயில் அம்மானே
(9)
காதல் செய்து களித்துப் பிதற்றிக்
கடிமா மலரிட்டுனையேத்தி
ஆதல் செய்யும் அடியார் இருக்க
ஐயம் கொள்ளல் அழகிதே
ஓதக் கண்டேன் உன்னை மறவேன்
உமையாள் கணவா எனைஆள்வாய்
ஆதற்கழனிப் பழனக் கச்சூர்
ஆலக்கோயில் அம்மானே
(10)
அன்னம் மன்னும் வயல்சூழ் கச்சூர்
ஆலக்கோயில் அம்மானை
உன்ன முன்னும் மனத்தாரூரன்
ஆரூரன் பேர் முடி வைத்த
மன்னு புலவன் வயல் நாவலர்கோன்
செஞ்சொல் நாவன் வன்தொண்டன்
பன்னு தமிழ்நூல் மாலை வல்லார்
அவர்என் தலைமேல் பயில்வாரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page