புறவார்பனங்காட்டூர்:

<– நடுநாடு

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

சம்பந்தர் தேவாரம்:

(1)
விண்ணமர்ந்தன மும்மதில்களை வீழ வெங்கணையால் எய்தாய், விரி
பண்ணமர்ந்து ஒலிசேர் புறவார் பனங்காட்டூர்ப்
பெண்ணமர்ந்தொரு பாகமாகிய பிஞ்ஞகா, பிறைசேர் நுதலிடைக்
கண்அமர்ந்தவனே கலந்தார்க்கருளாயே
(2)
நீடல் கோடல் அலரவெண் முல்லை நீர்மலர் நிரைத் தாதளம்செயப்
பாடல் வண்டறையும் புறவார் பனங்காட்டூர்த்
தோடிலங்கிய காதயல் மின்துளங்க, வெண்குழை துள்ள, நள்ளிருள்
ஆடும் சங்கரனே அடைந்தார்க்கருளாயே
(3)
வாளையும் கயலும் மிளிர் பொய்கை வார்புனல் கரை அருகெலாம் வயல்
பாளை ஓண்கமுகம் புறவார் பனங்காட்டூர்ப்
பூளையும் நறுங்கொன்றையும் மத மத்தமும் புனைவாய், கழலிணைத்
தாளையே பரவும் தவத்தார்க்கருளாயே.
(4)
மேய்ந்திளம் செந்நெல் மென்கதிர் கவ்வி மேற்படுகலின் மேதி வைகறை
பாய்ந்த தண்பழனப் புறவார் பனங்காட்டூர்
ஆய்ந்த நான்மறை பாடியாடும் அடிகள் என்றென்றரற்றி நன்மலர்
சாய்ந்தடி பரவும் தவத்தார்க்கருளாயே
(5)
செங்கயல்லொடு சேல் செருச்செயச் சீறி யாழ்முரல் தேனினத்தொடு
பங்கயம் மலரும் புறவார் பனங்காட்டூர்க்
கங்கையும் மதியும் கமழ்சடைக் கேண்மையாளொடும் கூடி, மான்மறி
அங்கை ஆடலனே அடியார்க்கருளாயே
(6)
நீரினார்வரை கோலி மால்கடல் நீடிய பொழில் சூழ்ந்து வைகலும்
பாரினார் பிரியாப் புறவார் பனங்காட்டூர்க்
காரினார் மலர்க் கொன்றை தாங்கு கடவுளென்று கைகூப்பி நாள்தொறும்
சீரினால் வணங்கும் திறத்தார்க்கருளாயே
(7)
கையரிவையர் மெல் விரல்அவை காட்டி அம்மலர்க் காந்தளம்குறி
பையரா விரியும் புறவார் பனங்காட்டூர்
மெய்யரிவைஒர் பாகமாகவும் மேவினாய், கழலேத்தி நாள்தொறும்
பொய்யிலா அடிமை புரிந்தார்க்கருளாயே
(8)
தூவி அஞ்சிறை மெல்நடையன மல்கிஒல்கிய தூமலர்ப் பொய்கைப்
பாவில் வண்டறையும் புறவார் பனங்காட்டூர்
மேவி அந்நிலையாய் அரக்கன தோளடர்த்தவன் பாடல் கேட்டருள்
ஏவிஎம்பெருமான் என்பவர்க்கருளாயே
(9)
அந்தண் மாதவி புன்னை நல்ல அசோகமும் அரவிந்தம் மல்லிகை
பைந்தண் ஞாழல்கள்சூழ் புறவார் பனங்காட்டூர்
எந்திளம் முகில்வண்ணன் நான்முகன் என்றிவர்க்கரிதாய் நிமிர்ந்ததொர்
சந்தம் ஆயவனே தவத்தார்க்கருளாயே
(10)
நீணமார் முருகுண்டு வண்டினம் நீலமாமலர் கவ்வி நேரிசை
பாணில் யாழ்முரலும் புறவார் பனங்காட்டூர்
நாணழிந்துழல் வார்சமணரும் நண்பில் சாக்கியரும் நகத்தலை
ஊண்உரியவனே உகப்பார்க்கருளாயே
(11)
மையினார் மணிபோல் மிடற்றனை, மாசில் வெண்பொடிப் பூசும் மார்பனைப்
பைய தேன்பொழில் சூழ் புறவார் பனங்காட்டூர்
ஐயனைப், புகழான காழியுள் ஆய்ந்த நான்மறை ஞானசம்பந்தன்
செய்யுள் பாடவல்லார் சிவலோகம் சேர்வாரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page