அறையணிநல்லூர்:

<– நடுநாடு

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

சம்பந்தர் தேவாரம்:

(1)
பீடினால் பெரியோர்களும், பேதைமை கெடத் தீதிலா
வீடினால் உயர்ந்தார்களும், வீடிலார் இள வெண்மதி
சூடினார், மறை பாடினார், சுடலை நீறணிந்தார், அழல்
ஆடினார் அறையணிநல்லூர் அங்கையால் தொழுவார்களே
(2)
இலையினார் சூலம், ஏறுகந்தேறியே இமையோர் தொழ
நிலையினால் ஒரு காலுறச் சிலையினால் மதிலெய்தவன்
அலையினார் புனல்சூடிய அண்ணலார் அறையணிநல்லூர்
தலையினால் தொழுதோங்குவார் நீங்குவார் தடுமாற்றமே
(3)
என்பினார், கனல் சூலத்தார், இலங்கு மாமதி உச்சியான்
பின்பினால் பிறங்கும் சடைப் பிஞ்ஞகன், பிறப்பிலி என்று
முன்பினார்மூவர் தாந்தொழு முக்கண் மூர்த்திதன் தாள்களுக்கு
அன்பினார், அறையணிநல்லூர் அங்கையால் தொழுவார்களே
(4)
விரவுநீறு பொன் மார்பினில் விளங்கப் பூசிய வேதியன்
உரவு நஞ்சமுதாக உண்டுறுதி பேணுவதன்றியும்
அரவு நீள்சடைக் கண்ணியார், அண்ணலார், அறையணிநல்லூர்
பரவுவார் பழி நீங்கிடப் பறையும் தாம்செய்த பாவமே
(5)
தீயினார்திகழ் மேனியாய், தேவர் தாந்தொழு தேவன்நீ
ஆயினாய், கொன்றையாய், அனல்அங்கையாய், அறையணிநல்லூர்
மேயினார் தமது தொல்வினை வீட்டினாய், வெய்ய காலனைப்
பாயினாய், அதிர் கழலினாய் பரமனே அடி பணிவனே
(6)
விரையினார், கொன்றை சூடியும் வேகநாகமும் வீக்கிய
அரையினார், அறையணிநல்லூர் அண்ணலார், அழகாயதோர்
நரையினார், விடையூர்தியார், நக்கனார், நறும் போதுசேர்
உரையினால் உயர்ந்தார்களும் உரையினால் உயர்ந்தார்களே
(7)
வீரமாகிய வேதியர், வேகமா களியானையின்
ஈரமாகிய உரிவை போர்த்தரிவை மேற்சென்ற எம்இறை
ஆரமாகிய பாம்பினார், அண்ணலார், அறையணிநல்லூர்
வாரமாய் நினைப்பார்கள் தம் வல்வினை அவை மாயுமே
(8)
தக்கனார் பெருவேள்வியைத் தகர்த்துகந்தவன், தாழ்சடை
முக்கணான், மறைபாடிய முறைமையால் முனிவர் தொழ
அக்கினோடெழிலாமை பூண் அண்ணலார், அறையணிநல்லூர்
நக்கனார், அவர் சார்வலால் நல்கு சார்விலோம் நாங்களே
(9)
வெய்ய நோயிலர், தீதிலர், வெறியராய்ப் பிறர்பின் செலார்
செய்வதே அலங்காரமாம், இவையிவை தேறி இன்புறில்
ஐயமேற்றுணும் தொழிலராம், அண்ணலார், அறையணிநல்லூர்ச்
சைவனார், அவர் சார்வலால் யாதும் சார்விலோம் நாங்களே
(10)
வாக்கியம் சொல்லி யாரொடும் வகையலா வகை செய்யன்மின்
சாக்கியம் சமணென்றிவை சாரேலும், அரணம்பொடி
ஆக்கிய மழு வாட்படை அண்ணலார் அறையணி நல்லூர்ப்
பாக்கியம் குறையுடையீரேல் பறையுமாம் செய்த பாவமே
(11)
கழியுலாம் கடல் கானல்சூழ் கழுமலம் அமர் தொல்பதிப்
பழியிலா மறை ஞானசம்பந்தன் நல்லதோர் பண்பினார்
மொழியினால் அறையணிநல்லூர் முக்கண் மூர்த்திதன் தாள்தொழக்
கெழுவினார்அவர் தம்மொடும் கேடில் வாழ்பதி பெறுவரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page