திருஎருக்கத்தம்புலியூர்:

<– நடுநாடு

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

சம்பந்தர் தேவாரம்:

(1)
படையார்தரு பூதப் பகடார் உரிபோர்வை
உடையான், உமையோடும் உடனாய் இடுகங்கைச்
சடையான், எருக்கத்தம் புலியூர்த் தகுகோயில்
விடையான் அடியேத்த மேவா வினைதானே
(2)
இலையார் தருசூலப் படைஎம் பெருமானாய்
நிலையார் மதில்மூன்று நீறாய் விழஎய்த
சிலையான், எருக்கத்தம் புலியூர்த் திகழ்கோயில்
கலையான் அடியேத்தக் கருதா வினைதானே
(3)
விண்ணோர் பெருமானே, விகிர்தா, விடையூர்தீ
பெண்ஆண் அலியாகும் பித்தா பிறைசூடீ
எண்ணார் எருக்கத்தம் புலியூர் உறைகின்ற
அண்ணா என வல்லார்க்கடையா வினைதானே
(4)
அரையார் தருநாகம் அணிவான், அலர்மாலை
விரையார் தருகொன்றை உடையான், விடையேறி
வரையான், எருக்கத்தம் புலியூர் மகிழ்கின்ற
திரையார் சடையானைச் சேரத் திருவாமே
(5)
வீறார் முலையாளைப் பாகம் மிகவைத்துச்
சீறா வருகாலன் சினத்தை அழிவித்தான்
ஏறான் எருக்கத்தம் புலியூர் இறையானை
வேறா நினைவாரை விரும்பா வினைதானே
(6)
நகுவெண்தலை ஏந்தி நானாவிதம் பாடிப்
புகுவான் அயம் பெய்யப், புலித்தோல் பியற்கிட்டுத்
தகுவான், எருக்கத்தம் புலியூர்த் தகைந்தங்கே
தொகுவான், கழலேத்தத் தொடரா வினைதானே
(7)
(8)
ஆஆ எனஅரக்கன் அலற அடர்த்திட்டுத்
தேவா எனஅருளார் செல்வம் கொடுத்திட்ட
கோவே, எருக்கத்தம் புலியூர் மிகுகோயில்
தேவே என அல்லல் தீர்தல் திடமாமே
(9)
மறையான் நெடுமால் காண்பரியான், மழுவேந்தி
நிறையா மதிசூடி நிகழ் முத்தின் தொத்தே
இறையான், எருக்கத்தம் புலியூர் இடம்கொண்ட
கறையார் மிடற்றானைக் கருதக் கெடும் வினையே
(10)
புத்தர் அருகர்தம் பொய்கள் புறம்போக்கிச்
சுத்தி தரித்துறையும் சோதி உமையோடும்
நித்தன், எருக்கத்தம் புலியூர் நிகழ்வாய
அத்தன் அறவன்தன் அடியே அடைவோமே
(11)
ஏரார் எருக்கத்தம் புலியூர் உறைவானைச்
சீரார் திகழ்காழித் திருவார் சம்பந்தன்
ஆரா அருந்தமிழ் மாலையிவை வல்லார்
பாரார் அவரேத்தப் பதிவான் உறைவாரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page