திருச்சோபுரம்:

<– நடுநாடு

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

சம்பந்தர் தேவாரம்:

(1)
வெங்கண்ஆனை ஈருரிவை போர்த்து, விளங்கும் மொழி
மங்கைபாகம் வைத்துகந்த மாண்பதென்னை கொலாம்
கங்கையோடு திங்கள்சூடிக் கடிகமழும் கொன்றைத்
தொங்கலானே, தூயநீற்றாய், சோபுர மேயவனே
(2)
விடையமர்ந்து வெண்மழு ஒன்றேந்தி, விரிந்திலங்கு
சடையொடுங்கத் தண்புனலைத் தாங்கியதென்னை கொலாம்
கடையுயர்ந்த மும்மதிலும் காய்ந்தனலுள் அழுந்தத்
தொடைநெகிழ்ந்த வெஞ்சிலையாய் சோபுர மேயவனே
(3)
தீயராய வல்லரக்கர் செந்தழலுள் அழுந்தச்
சாயஎய்து வானவரைத் தாங்கியதென்னை கொலாம்
பாயும்வெள்ளை ஏற்றையேறிப் பாய்புலித் தோலுடுத்த
தூயவெள்ளை நீற்றினானே சோபுர மேயவனே
(4)
பல்லிலோடு கையிலேந்திப் பல்கடையும் பலிதேர்ந்து
அல்லல் வாழ்க்கை மேலதான ஆதரவென்னை கொலாம்
வில்லை வென்ற நுண்புருவ வேல்நெடுங் கண்ணியொடும்
தொல்லை ஊழியாகி நின்றாய் சோபுர மேயவனே
(5)
நாற்றமிக்க கொன்றை துன்று செஞ்சடைமேல் மதியம்
ஏற்றமாக வைத்துகந்த காரணம் என்னை கொலாம்
ஊற்றமிக்க காலன் தன்னை ஒல்க உதைத்தருளி
தோற்றம் ஈறுமாகி நின்றாய் சோபுர மேயவனே
(6)
கொல்நவின்ற மூவிலைவேல் கூர்மழு வாட்படையன்
பொன்னை வென்ற கொன்றைமாலை சூடும் பொற்பென்னை கொலாம்
அன்னமன்ன மென்னடையாள் பாகம் அமர்ந்தரைசேர்
துன்ன வண்ண ஆடையினாய் சோபுர மேயவனே
(7)
குற்றமின்மை உண்மை நீயென்று உன்னடியார் பணிவார்
கற்றகேள்வி ஞானமான காரணம் என்னை கொலாம்
வற்றலாமை வாளரவம் பூண்டயன் வெண்தலையில்
துற்றலான கொள்கையானே சோபுர மேயவனே
(8)
விலங்கலொன்று வெஞ்சிலையாக் கொண்டு விறல்அரக்கர்
குலங்கள் வாழுமூர் எரித்த கொள்கையிதென்னை கொலாம்
இலங்கை மன்னு வாளவுணர் கோனை எழில் விரலால்
துலங்கஊன்றி வைத்துகந்தாய் சோபுர மேயவனே
(9)
விடங்கொணாக மால்வரையைச் சுற்றி விரிதிரை நீர்
கடைந்த நஞ்சை உண்டுகந்த காரணம் என்னை கொலாம்
இடந்து மண்ணை உண்ட மாலும், இன்மலர்மேல் அயனும்
தொடர்ந்து முன்னம் காணமாட்டாச் சோபுர மேயவனே
(10)
புத்தரோடு புன்சமணர் பொய்யுரையே உரைத்துப்
பித்தராகக் கண்டுகந்த பெற்றிமை என்னை கொலாம்
மத்தயானை ஈருரிவை போர்த்து வளர்சடை மேல்
துத்திநாகம் சூடினானே சோபுர மேயவனே
(11)
சோலைமிக்க தண்வயல் சூழ் சோபுர மேயவனைச்
சீலமிக்க தொல்புகழார் சிரபுரக்கோன் நலத்தான்
ஞாலமிக்க தண்தமிழான் ஞானசம்பந்தன் சொன்ன
கோலமிக்க மாலை வல்லார் கூடுவர் வானுலகே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page