(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)
சம்பந்தர் தேவாரம்:
(1)
பொன்னியல் பொருப்பரையன், மங்கையொரு பங்கர், புனல்தங்கு சடைமேல்
வன்னியொடு மத்தமலர் வைத்தவிறல் வித்தகர், மகிழ்ந்துறைவிடம்
கன்னியிள வாளைகுதி கொள்ளஇள வள்ளைபடர் அள்ளல் வயல்வாய்
மன்னியிள மேதிகள் படிந்துமனை சேருதவி மாணிகுழியே
(2)
சோதிமிகு நீறதுமெய் பூசியொரு தோலுடை புனைந்து, தெருவே
மாதர்மனை தோறுமிசை பாடிவசி பேசும் அரனார் மகிழ்விடம்
தாதுமலி தாமரை மணங்கமழ வண்டுமுரல் தண்பழன மிக்கு
ஓதமலி வேலைபுடை சூழுலகில் நீடுதவி மாணிகுழியே
(3)
அம்பனைய கண்உமை மடந்தையவள் அஞ்சி வெருவச் சினமுடைக்
கம்பமத யானையுரி செய்த அரனார் கருதி மேய இடமாம்
வம்புமலி சோலைபுடை சூழமணி மாடமது நீடியழகார்
உம்பரவர் கோனகரம் என்னமிக மன்னுதவி மாணிகுழியே
(4)
நித்த நியமத் தொழிலனாகி நெடுமால் குறளனாகி மிகவும்
சித்தமதொருக்கி வழிபாடு செய நின்ற சிவலோகன்இடமாம்
கொத்தலர் மலர்ப்பொழிலில் நீடுகுல மஞ்ஞை நடமாடல்அதுகண்டு
ஒத்தவரி வண்டுகள் உலாவிஇசை பாடுதவி மாணிகுழியே.
(5)
மாசில் மதிசூடு சடை மாமுடியர், வல்லசுரர் தொல்நகரமுன்
நாசமது செய்துநல வானவர்களுக்கருள் செய் நம்பனிடமாம்
வாசமலி மென்குழல் மடந்தையர்கள் மாளிகையின் மன்னியழகார்
ஊசல் மிசையேறி இனிதாக இசை பாடுதவி மாணிகுழியே
(6)
மந்தமலர் கொண்டு வழிபாடு செயும் மாணிஉயிர் வவ்வ மனமாய்
வந்தவொரு காலனுயிர் மாளஉதை செய்த மணிகண்டன் இடமாம்
சந்தினொடு காரகில் சுமந்துதட மாமலர்கள் கொண்டு கெடிலம்
உந்துபுனல் வந்துவயல் பாயு மணமார் உதவி மாணிகுழியே
(7)
எண் பெரிய வானவர்கள் நின்றுதுதி செய்ய இறையே கருணையாய்
உண்பரிய நஞ்சுதனை உண்டுலகம் உய்ய அருள் உத்தமன்இடம்
பண்பயிலும் வண்டுபல கெண்டிமது உண்டுநிறை பைம்பொழிலின் வாய்
ஒண்பலவின் இன்கனி சொரிந்துமண நாறுதவி மாணிகுழியே
(8)
எண்ணம் அதுவின்றி எழிலார் கைலை மாமலை எடுத்த திறலார்
திண்ணிய அரக்கனை நெரித்தருள் புரிந்த சிவலோன் இனிடமாம்
பண்ணமரு மென்மொழியினார் பணைமுலைப் பவளவாய் அழகதார்
ஒண்ணுதல் மடந்தையர் குடைந்து புனலாடுதவி மாணிகுழியே
(9)
நேடும் அயனோடு திருமாலும் உணராவகை நிமிர்ந்து முடிமேல்
ஏடுலவு திங்கள் மதமத்தம் இதழிச்சடைஎம் ஈசன்இடமாம்
மாடுலவு மல்லிகை குருந்துகொடி மாதவி செருந்தி குரவின்
ஊடுலவு புன்னைவிரை தாதுமலி சேருதவி மாணிகுழியே
(10)
மொட்டைய அமணாதர் முதுதேரர் மதியில்லிகள் முயன்றன படும்
முட்டைகள் மொழிந்த மொழி கொண்டருள் செய்யாத முதல்வன்தன் இடமாம்
மட்டைமலி தாழை இளநீர் முதிய வாழையில் விழுந்த அதரில்
ஒட்டமலி பூகநிரை தாறுதிர வேறுதவி மாணிகுழியே
(11)
உந்திவரு தண்கெடிலம் ஓடுபுனல் சூழுதவி மாணிகுழிமேல்
அந்திமதி சூடிய எம்மானை அடி சேரும் அணி காழிநகரான்
சந்தநிறை தண்தமிழ் தெரிந்துணரும் ஞானசம்பந்தனது சொல்
முந்தியிசை செய்து மொழிவார்கள் உ டையார்கள் நெடுவான நிலனே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...