திருத்துறையூர்:

<– நடு நாடு

(குறிப்பு: சுந்தரரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)
 

சுந்தரர் தேவாரம்:

(1)
மலையார் அருவித் திரள் மாமணி உந்திக்
குலையாரக் கொணர்ந்தெற்றி ஓர்பெண்ணை வடபால்
கலையார் அல்குல் கன்னியர் ஆடும் துறையூர்த்
தலைவா உனை வேண்டிக் கொள்வேன் தவநெறியே
(2)
மத்தம் மத யானையின் வெண்மருப்புந்தி
முத்தம் கொணர்ந்தெற்றி ஓர்பெண்ணை வடபால்
பத்தர் பயின்றேத்திப் பரவும் துறையூர்
அத்தா உனை வேண்டிக் கொள்வேன் தவநெறியே
(3)
கந்தம்கமழ் காரகில் சந்தனம் உந்திச்
செந்தண் புனல் வந்திழி பெண்ணை வடபால்
மந்தீ பல மாநடம்ஆடும் துறையூர்
எந்தாய் உனை வேண்டிக் கொள்வேன் தவநெறியே
(4)
அரும்பார்ந்தன மல்லிகை சண்பகம் சாடிச்
சுரும்பாரக் கொணர்ந்தெற்றிஓர் பெண்ணை வடபால்
கரும்பார் மொழிக் கன்னியர் ஆடும் துறையூர்
விரும்பா உனை வேண்டிக் கொள்வேன் தவநெறியே
(5)
பாடார்ந்தன மாவும் பலாக்களும் சாடி
நாடார வந்தெற்றி ஓர்பெண்ணை வடபால்
மாடார்ந்தன மாளிகை சூழும் துறையூர்
வேடா உனை வேண்டிக் கொள்வேன் தவநெறியே
(6)
மட்டார் மலர்க் கொன்றையும் வன்னியும் சாடி
மொட்டாரக் கொணர்ந்தெற்றி ஓர்பெண்ணை வடபால்
கொட்டாட்டொடு பாட்டொலி ஓவாத் துறையூர்ச்
சிட்டா உனை வேண்டிக் கொள்வேன் தவநெறியே
(7)
மாதார் மயிற்பீலியும் வெண்ணுரை உந்தித்
தாதாரக் கொணர்ந்தெற்றி ஓர்பெண்ணை வடபால்
போதார்ந்தன பொய்கைகள் சூழும் துறையூர்
நாதா உனை வேண்டிக் கொள்வேன் தவநெறியே
(8)
கொய்யார் மலர்க் கோங்கொடு வேங்கையும் சாடிச்
செய்யாரக் கொணர்ந்தெற்றி ஓர்பெண்ணை வடபால்
மையார் தடங்கண்ணியர் ஆடும் துறையூர்
ஐயா உனை வேண்டிக் கொள்வேன் தவநெறியே
(9)
விண்ணார்ந்தன மேகங்கள் நின்று பொழிய
மண்ணாரக் கொணர்ந்தெற்றி ஓர்பெண்ணை வடபால்
பண்ணார் மொழிப் பாவையர் ஆடும் துறையூர்
அண்ணா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே
(10)
மாவாய்ப் பிளந்தானும் மலர்மிசையானும்
ஆவா அவர் தேடித் திரிந்தலமந்தார்
பூவார்ந்தன பொய்கைகள் சூழும் துறையூர்த்
தேவா உனை வேண்டிக் கொள்வேன் தவநெறியே
(11)
செய்யார் கமலம் மலர் நாவலூர் மன்னன்
கையால் தொழுதேத்தப்படும் துறையூர் மேல்
பொய்யாத் தமிழ்ஊரன் உரைத்தன வல்லார்
மெய்யே பெறுவார்கள் தவநெறி தானே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page