(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)
(ஞானசம்பந்தர் தேவாரம்):
(1)
நிரைகழல் அரவம் சிலம்பொலி அலம்பும் நிமலர், நீறணி திருமேனி
வரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த வடிவினர், கொடியணி விடையர்
கரைகெழு சந்தும் காரகில் பிளவும் அளப்பரும் கனமணி வரன்றிக்
குரை கடலோத நித்திலம் கொழிக்கும் கோணமாமலை அமர்ந்தாரே
(2)
கடிதென வந்த கரிதனை உரித்து, அவ்வுரி மேனிமேல் போர்ப்பர்
பிடியன நடையாள் பெய்வளை மடந்தை பிறைநுதல் அவளொடும் உடனாய்க்
கொடிதெனக் கதறும் குரைகடல் சூழ்ந்து, கொள்ளமும் நித்திலம் சுமந்து
குடிதனை நெருங்கிப் பெருக்கமாய்த் தோன்றும் கோணமாமலை அமர்ந்தாரே
(3)
பனித்திளம் திங்கள் பைந்தலை நாகம் படர்சடை முடியிடை வைத்தார்
கனித்திளம் துவர்வாய்க் காரிகை பாகமாக முன் கலந்தவர், மதில் மேல்
தனித்த பேருருவ விழித்து அழல்நாகம் தாங்கிய மேருவெஞ் சிலையாக்
குனித்ததோர் வில்லார், குரைகடல் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரே
(4)
பழித்திளம் கங்கை சடையிடை வைத்துப், பாங்குடை மதனனைப் பொடியா
விழித்து அவன்தேவி வேண்ட முன்கொடுத்த விமலனார், கமலமார் பாதர்
தெழித்துமுன் அரற்றும் செழுங்கடல் தரளம் செம்பொனும் இப்பியும் சுமந்து
கொழித்து வன்திரைகள் கரையிடைச் சேர்க்கும் கோணமாமலை அமர்ந்தாரே
விழித்து அவன்தேவி வேண்ட முன்கொடுத்த விமலனார், கமலமார் பாதர்
தெழித்துமுன் அரற்றும் செழுங்கடல் தரளம் செம்பொனும் இப்பியும் சுமந்து
கொழித்து வன்திரைகள் கரையிடைச் சேர்க்கும் கோணமாமலை அமர்ந்தாரே
(5)
தாயினும் நல்ல தலைவர் என்றடியார் தம்அடி போற்றிசைப்பார்கள்
வாயினும் மனத்தும் மருவி நின்றகலா மாண்பினர், காண்பல வேடர்
நோயிலும் பிணியும் தொழிலர் பால்நீக்கி, நுழைதரு நூலினர்; ஞாலம்
கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரே
(6)
பரிந்துநன் மனத்தால் வழிபடு மாணி தன்னுயிர் மேல்வரும் கூற்றைத்
திரிந்திடா வண்ணம் உதைத்து அவற்கருளும் செம்மையார், நம்மை ஆளுடையார்
விரிந்துயர் மௌவல் மாதவி புன்னை வேங்கைவண் செருந்தி செண்பகத்தின்
குருந்தொடு முல்லை கொடிவிடும் பொழில்சூழ் கோணமாமலை அமர்ந்தாரே
(7)
—
(8)
எடுத்தவன் தருக்கை இழித்தவர் விரலால், ஏத்திட ஆத்தமாம் பேறு
தொடுத்தவர் செல்வம், தோன்றிய பிறப்பும் இறப்பறியாதவர், வேள்வி
தடுத்தவர், வனப்பால் வைத்ததோர் கருணை தன்னருள் பெருமையும் வாழ்வும்
கொடுத்தவர், விரும்பும் பெரும் புகழாளர் கோணமாமலை அமர்ந்தாரே
(9)
அருவராது ஒருகை வெண்தலைஏந்தி, அகந் தொறும் பலியுடன் புக்க
பெருவராய் உறையும் நீர்மையர், சீர்மைப் பெருங்கடல் வண்ணனும் பிரமன்
இருவரும் அறியா வண்ணம் ஒள்ளெரியா உயர்ந்தவர், பெயர்ந்த நன் மாற்கும்
குருவராய் நின்றார், குரைகழல் வணங்கக் கோணமாமலை அமர்ந்தாரே
(10)
நின்றுணும் சமணும் இருந்துணும் தேரும் நெறியலாதன புறம் கூற
வென்று நஞ்சுண்ணும் பரிசினர், ஒருபால் மெல்லியலொடும் உடனாகித்
துன்றுமொண் பௌவ மவ்வலும் சூழ்ந்து தாழ்ந்துறு திரைபல மோதிக்
குன்றுமொண் கானல் வாசம் வந்துலவும் கோணமாமலை அமர்ந்தாரே
(11)
குற்றமிலாதார் குரைகடல் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரைக்
கற்றுணர் கேள்விக் காழியர் பெருமான் கருத்துடை ஞானசம்பந்தன்
உற்ற செந்தமிழார் மாலை ஈரைந்தும் உரைப்பவர் கேட்பவர் உயர்ந்தோர்
சுற்றமுமாகித் தொல்வினை அடையார், தோன்றுவர் வானிடைப் பொலிந்தே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...