இந்திரநீலப் பருப்பதம்:

<– வட நாடு

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சம்பந்தர் தேவாரம்):

(1)
குலவு பாரிடம் போற்ற வீற்றிருந்து
இலகு மான் மழுவேந்து மங்கையன்
நிலவும் இந்திர நீலப் பர்ப்பதத்து
உலவினான் அடி உள்க நல்குமே
(2)
குறைவிலார் மதிசூடி, ஆடல்வண்டு
அறையும் மாமலர்க் கொன்றை சென்னிசேர்
இறைவன், இந்திரநீலப் பர்ப்பதத்து
உறைவினான் தனை ஓதி உய்ம்மினே
(3)
என்பொன் என்மணி என்ன ஏத்துவார்
நம்பனான், மறைபாடு நாவினான்
இன்பன், இந்திரநீலப் பர்ப்பதத்து
அன்பன் பாதமே அடைந்து வாழ்மினே
(4)
நாசமாம் வினை, நன்மைதான் வரும்
தேசமார் புகழாய செம்மைஎம்
ஈசன் இந்திரநீலப் பர்ப்பதம்
கூசி வாழ்த்துதும் குணமதாகவே
(5)
மருவு மான்மட மாதொர் பாகமாய்ப்
பரவுவார் வினை தீர்த்த பண்பினான்
இரவன் இந்திரநீலப் பர்ப்பதத்து
அருவி சூடிடும் அடிகள் வண்ணமே
(6)
வெண்ணிலா மதி சூடும் வேணியன்
எண்ணிலார் மதில் எய்த வில்லினன்
அண்ணல் இந்திரநீலப் பர்ப்பதத்து
உண்ணிலா உறும் ஒருவன் அல்லனே
(7)
கொடிகொள் ஏற்றினர், கூற்றுதைத்தவர்
பொடிகொள் மேனியில் பூண்ட பாம்பினர்
அடிகள் இந்திரநீலப் பர்ப்பதம்
உடைய வாணர் உகந்த கொள்கையே
(8)
எடுத்த வல்லரக்கன் கரம் புயம்
அடர்த்ததோர் விரலால் அவனைஆட்
படுத்தன், இந்திரநீலப் பர்ப்பதம்
முடித்தலம்உற முயலும் இன்பமே
(9)
பூவினானொடு மாலும் போற்றுறும்
தேவன் இந்திரநீலப் பர்ப்பதம்
பாவியா எழுவாரைத் தம்வினை
கோவியா வரும் கொல்லும் கூற்றமே
(10)
கட்டர் குண்டமண் தேரர் சீரிலர்
விட்டர் இந்திர நீலப் பர்ப்பதம்
எட்டனை நினையாததென் கொலோ
சிட்டதாய் உறைஆதி சீர்களே
(11)
கந்தமார் பொழில் சூழ்ந்த காழியான்
இந்திரன் தொழு நீலப் பர்ப்பதத்து
அந்தம் இல்லியை ஏத்து !ஞானசம்
பந்தன் பாடல்கொண்டு ஓதி வாழ்மினே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page