(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)
(சம்பந்தர் தேவாரம்):
(1)
மாதொர் கூறுகந்து ஏறதேறிய
ஆதியான் உறை ஆடானை
போதினால் புனைந்தேத்துவார் தமை
வாதியா வினை மாயுமே
(2)
வாடல் வெண்தலை அங்கையேந்தி நின்று
ஆடலான் உறை ஆடானை
தோடுலா மலர் தூவிக் கைதொழ
வீடு நுங்கள் வினைகளே
(3)
மங்கை கூறினன் மான்மறி உடை
அங்கையான் உறை ஆடானை
தங்கையால் தொழுதேத்த வல்லவர்
மங்கு நோய்பிணி மாயுமே
(4)
சுண்ண நீறணி மார்பில் தோல்புனை
அண்ணலான் உறை ஆடானை
வண்ண மாமலர் தூவிக் கைதொழ
எண்ணுவார் இடர் ஏகுமே
(5)
கொய்யணி மலர்க் கொன்றை சூடிய
ஐயன் மேவிய ஆடானை
கையணி மலரால் வணங்கிட
வெய்ய வல்வினை வீடுமே
(6)
வானிளம் மதிமல்கு வார்சடை
ஆனஞ்சாடலன் ஆடானை
தேனணிம் மலர் சேர்த்த, முன்செய்த
ஊனம் உள்ள ஒழியுமே
(7)
துலங்கு வெண்மழு ஏந்திச் சூழ்சடை
அலங்கலான் உறை ஆடானை
நலங்கொள் மாமலர் தூவி நாள்தொறும்
வலம்கொள்வார் வினை மாயுமே
(8)
வெந்த நீறணி மார்பில் தோல்புனை
அந்தம் இல்லவன் ஆடானை
கந்தமா மலர் தூவிக் கைதொழும்
சிந்தையார் வினை தேயுமே
(9)
மறை வலாரொடு வானவர்தொழுது
அறையும் தண்புனல் ஆடானை
உறையும் ஈசனை ஏத்தத், தீவினை
பறையும் நல்வினை பற்றுமே
(10)
மாயனும் மலரானும் கைதொழ
ஆயஅந்தணன் ஆடானை
தூய மாமலர் தூவிக் கைதொழத்
தீய வல்வினை தீருமே
(11)
வீடினார் மலி வெங்கடத்து நின்று
ஆடலான் உறை ஆடானை
நாடி ஞானசம்பந்தன் செந்தமிழ்
பாட நோய்பிணி பாறுமே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...