திருஏடகம்:

<– பாண்டிய நாடு

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சம்பந்தர் தேவாரம்):

(1)
வன்னியும் மத்தமும் மதிபொதி சடையினன்
பொன்னிய திருவடி புதுமலர் அவைகொடு
மன்னிய மறையவர் வழிபட அடியவர்
இன்னிசை பாடலர் ஏடகத்தொருவனே
(2)
கொடிநெடு மாளிகை கோபுரம் குளிர்மதி
வடிவுற அமைதர மருவிய ஏடகத்து
அடிகளை அடி பணிந்தரற்றுமின் அன்பினால்
இடிபடும் வினைகள்போய் இல்லையதாகுமே
(3)
குண்டலந்திகழ்தரு காதுடைக் குழகனை
வண்டலம்பும் மலர்க் கொன்றை வான்மதியணி
செண்டலம்பும் விடைச் சேடனூர் ஏடகம்
கண்டுகை தொழுதலும் கவலைநோய் கழலுமே
(4)
ஏலமார் தருகுழல் ஏழையோடெழில் பெறும்
கோலமார் தருவிடைக் குழகனான் உறைவிடம்
சால மாதவிகளும் சந்தனம் சண்பகம்
சீலமார் ஏடகம் சேர்தலால் செல்வமே
(5)
வரியணி நயனிநன் மலைமகள் மறுகிடக்
கரியினை உரிசெய்த கறையணி மிடறினன்
பெரியவன், பெண்ணினோடு ஆண்அலியாகிய
எரியவன் உறைவிடம் ஏடகக் கோயிலே
(6)
பொய்கையின் பொழிலுறு புதுமலர்த் தென்றலார்
வைகையின் வடகரை மருவிய ஏடகத்து
ஐயனை அடி பணிந்தரற்றுமின், அடர்தரும்
வெய்ய வன்பிணி கெட வீடெளிதாகுமே
(7)
(8)
தடவரை எடுத்தவன் தருக்கிறத் தோளடர்
படவிரல் ஊன்றியே பரிந்தவற்கருள் செய்தான்
மடவரல் எருக்கொடு வன்னியும் மத்தமும்
இடமுடைச் சடையினன் ஏடகத்திறைவனே
(9)
பொன்னுமா மணிகளும் பொருதிரைச் சந்தகில்
தன்னுளார் வைகையின் கரைதனில் சமைவுற
அன்னமாம் அயனுமால் அடிமுடி தேடியும்
இன்னவாறென ஒணான் ஏடகத்தொருவனே
(10)
குண்டிகைக் கையினர் குணமிலாத் தேரர்கள்
பண்டியைப் பெருக்கிடும் பளகர்கள் பணிகிலர்
வண்டிரைக்கும் மலர்க் கொன்றையும் வன்னியும்
இண்டைசேர்க்கும் சடை ஏடகத்து எந்தையே
(11)
கோடுசந்தனம் அகில் கொண்டிழி வைகைநீர்
ஏடு சென்றணை தரும் ஏடகத்தொருவனை
நாடுதென் புகலியுண் ஞானசம்பந்தன
பாடல் பத்திவை வல்லார்க்கில்லையாம் பாவமே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page