(1)
என்னிலாரும் எனக்கினி யாரில்லை
என்னிலும் இனி யானொருவன் உளன்
என்னுளே உயிர்ப்பாய்ப் புறம் போந்துபுக்கு
என்னுளே நிற்கும் இன்னம்பர் ஈசனே
(2)
மட்டுண்பார்கள் மடந்தையர் வாள்கண்ணால்
கட்டுண்பார்கள் கருதுவதென் கொலோ
தட்டி முட்டித் தள்ளாடித் தழுக்குழி
எட்டு மூர்த்தியர் இன்னம்பர் ஈசனே
(3)
கனலுங் கண்ணியும் தண்மதியோடுடன்
புனலுங் கொன்றையும் சூடும் புரிசடை
அனலுஞ் சூலமும் மான்மறிக் கையினர்
எனலும் என்மனத்தின்னம்பர் ஈசனே
(4)
மழைக்கண் மாமயில்ஆலும் மகிழ்ச்சியால்
அழைக்கும் தன்னடியார்கள் தம்அன்பினைக்
குழைக்கும் தன்னைக் குறிக்கொள வேண்டியே
இழைக்கும் என்மனத்தின்னம்பர் ஈசனே
(5)
தென்னவன் எனையாளுஞ் சிவனவன்
மன்னவன், மதியம் மறை ஓதியான்
முன்னமன்னவன், சேர்வன பூழியான்
இன்னம் இன்புற்ற இன்னம்பர் ஈசனே
(6)
விளக்கும் வேறுபடப் பிறர் உள்ளத்தில்
அளக்குந் தன்னடியார் மனத்தன்பினைக்
குளக்கும் என்னைக் குறிக்கொள வேண்டியே
இளக்கும் என்மனத்தின்னம்பர் ஈசனே
(7)
சடைக்கணாள் புனலாள், அனல் கையதோர்
கடைக்கணால் மங்கை நோக்கிமவான் மகள்
படைக்கணால் பருகப் படுவான், நமக்கு
இடைக்கணாய் நின்ற இன்னம்பர் ஈசனே
(8)
தொழுது தூமலர் தூவித் துதித்துநின்று
அழுது காமுற்றரற்றுகின்றாரையும்
பொழுது போக்கிப் புறக்கணிப்பாரையும்
எழுதுங் கீழ்க்கணக்கின்னம்பர் ஈசனே
(9)
விரியுந் தண்ணிள வேனிலில் வெண்பிறை
புரியுங் காமனை வேவப் புருவமும்
திரியும் எல்லையில் மும்மதில் தீயெழுந்து
எரிய நோக்கிய இன்னம்பர் ஈசனே
(10)
சனியும் வெள்ளியுந் திங்களும் ஞாயிறும்
முனிவனாய் முடி பத்துடையான் தனைக்
கனிய ஊன்றிய காரணமென் கொலோ
இனியனாய் நின்ற இன்னம்பர் ஈசனே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...
