பொதுத் திருப்பதிகங்கள்: அப்பர் தேவாரம் (1):

<– பொதுத் திருப்பதிகங்கள்

(1)
நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்
    நரகத்தில் இடர்ப்படோம், நடலை இல்லோம்
ஏமாப்போம் பிணியறியோம், பணிவோம் அல்லோம்
    இன்பமே எந்நாளும் துன்பமில்லை
தாமார்க்கும் குடியல்லாத் தன்மையான
    சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதில்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
    கொய்மலர்ச் சேவடிஇணையே குறுகினோமே
(2)
அகலிடமே இடமாக ஊர்கள் தோறும்
    அட்டுண்பார் இட்டுண்பார் விலக்கார் ஐயம்
புகலிடமாம் அம்பலங்கள் பூமிதேவி
    உடன்கிடந்தால் புரட்டாள் பொய்யன்று மெய்யே
இகலுடைய விடையுடையான் ஏன்று கொண்டான்
    இனியேதும் குறைவிலோம் இடர்கள் தீர்ந்தோம்
துகிலுடுத்துப் பொன்பூண்டு திரிவார் சொல்லும்
    சொற்கேட்கக் கடவோமோ துரிசற்றோமே
(3)
வாராண்ட கொங்கையர்சேர் மனையில் சேரோம்
    மாதேவா மாதேவா என்று வாழ்த்தி
நீராண்ட புரோதாயம் ஆடப் பெற்றோம்
    நீறணியும் கோலமே நிகழப் பெற்றோம்
காராண்ட மழைபோலக் கண்ணீர் சோரக்
    கல்மனமே நல்மனமாய்க் கரையப் பெற்றோம்
பாராண்டு பகடேறி வருவார் சொல்லும்
    பணிகேட்கக் கடவோமோ பற்றற்றோமே
(4)
உறவாவார் உருத்திரபல் கணத்தினோர்கள்
    உடுப்பன கோவணத்தொடுகீள் உளவாமன்றே
செறுவாரும் செறமாட்டார் தீமை தானும்
    நன்மையாய்ச் சிறப்பதே பிறப்பில் செல்லோம்
நறவார்பொன் இதழி நறுந்தாரோன் சீரார்
    நமச்சிவாயச் சொல்ல வல்லோம் நாவால்
சுறவாரும் கொடியானைப் பொடியாக் கண்ட
    சுடர்நயனச் சோதியையே தொடர்வுற்றோமே
(5)
என்றும்நாம் யாவர்க்கும் இடைவோம் அல்லோம்
    இருநிலத்தில் எமக்கெதிர்ஆவாரும் இல்லை
சென்றுநாம் சிறுதெய்வம் சேர்வோம் அல்லோம்
    சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்
ஒன்றினால் குறையுடையோம் அல்லோம்அன்றே
    உறுபிணியார் செறலொழிந்திட்டோடிப் போனார்
பொன்றினார் தலைமாலை அணிந்த சென்னிப்
    புண்ணியனை நண்ணிய புண்ணியத்துளோமே
(6)
மூவுருவின் முதலுருவாய் இருநான்கான
    மூர்த்தியே என்று முப்பத்து மூவர்
தேவர்களும் மிக்கோரும் சிறந்து வாழ்த்தும்
    செம்பவளத் திருமேனிச் சிவனேயென்னும்
நாவுடையார் நமையாள உடையார் அன்றே
    நாவலந்தீ அகத்தினுக்கு நாதரான
காவலரே ஏவி விடுத்தாரேனும்
    கடவமல்லோம் கடுமையொடு களவற்றோமே
(7)
நிற்பனவும் நடப்பனவும் நிலனும் நீரும்
    நெருப்பினொடு காற்றாகி நெடுவானாகி
அற்பமொடு பெருமையுமாய் அருமையாகி
    அன்புடையார்க்கெளிமையதாய் அளக்கலாகாத்
தற்பரமாய்ச் சதாசிவமாய்த் தானும் யானும்
    ஆகின்ற தன்மையனை நன்மையோடும்
பொற்புடைய பேசக் கடவோம் பேயர்
    பேசுவன பேசுதுமே பிழையற்றோமே
(8)
ஈசனை, எவ்வுலகினுக்கும் இறைவன் தன்னை
    இமையவர்தம் பெருமானை, எரியாய் மிக்க
தேசனைச், செம்மேனி வெண்ணீற்றானைச்
    சிலம்பரையன் பொற்பாவை நலம்செய்கின்ற
நேசனை, நித்தலும் நினையப் பெற்றோம்
    நின்றுண்பார் எம்மை நினையச் சொன்ன
வாசகமெல்லாம் மறந்தோமன்றே
    வந்தீரார் மன்னவனாவான் தான்ஆரே
(9)
சடையுடையான் சங்கக் குழையோர் காதன்
    சாம்பலும் பாம்பும் அணிந்த மேனி
விடையுடையான் வேங்கை அதள் மேலாடை
    வெள்ளிபோல் புள்ளியுழை மான்தோல் சார்ந்த
உடையுடையான் நம்மை உடையான் கண்டீர்
    உம்மோடு மற்றும் உளராய் நின்ற
படையுடையான் பணிகேட்கும் பணியோம்அல்லோம்
    பாசமற வீசும் படியோம் நாமே
(10)
நாவார நம்பனையே பாடப் பெற்றோம்
    நாணற்றார் நள்ளாமே விள்ளப் பெற்றோம்
ஆவா என்றெமை ஆள்வான் அமரர் நாதன்
    அயனொடு மாற்கறிவரிய அனலாய் நீண்ட
தேவாதி தேவன் சிவனென் சிந்தை
    சேர்ந்திருந்தான், தென்திசைக்கோன் தானே வந்து
கோவாடிக் குற்றேவல் செய்கென்றாலும்
    குணமாகக் கொள்ளோம் எண் குணத்துளோமே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page