பொதுத் திருப்பதிகங்கள்: அப்பர் தேவாரம் (2):

<– பொதுத் திருப்பதிகங்கள்

(1)
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே
(2)
நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்
நமச்சிவாயவே நானறி விச்சையும்
நமச்சிவாயவே நா நவின்றேத்துமே
நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே
(3)
ஆளாகார், ஆளானாரை அடைந்துய்யார்
மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்
தோளாத சுரையோ தொழும்பர் செவி
வாளா மாய்ந்து மண்ணாகிக் கழிவரே
(4)
நடலை வாழ்வு கொண்டு என்செய்திர் நாணிலீர்
சுடலை சேர்வது சொற் பிரமாணமே
கடலின் நஞ்சமுதுண்டவர் கைவிட்டால்
உடலினார் கிடந்தூர் முனிபண்டமே
(5)
பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார்
நாக்கைக் கொண்டரன் நாமம் நவில்கிலார்
ஆக்கைக்கே இரை தேடி அலமந்து
காக்கைக்கே இரையாகிக் கழிவரே
(6)
குறிகளும் அடையாளமும் கோயிலும்
நெறிகளும் அவர் நின்றதோர் நேர்மையும்
அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும்
பொறியிலீர் மனம் என்கொல் புகாததே
(7)
வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனைச்
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்தவா வினையேன் நெடுங்காலமே
(8)
எழுது பாவை நல்லார்திறம் விட்டுநான்
தொழுது போற்றி நின்றேனையும் சூழ்ந்துகொண்டு
உழுத சால்வழியே உழுவான் பொருட்டு
இழுதை நெஞ்சம் இதென் படுகின்றதே
(9)
நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும் பொன்னார்சடைப் புண்ணியன்
பொக்க மிக்கவர் பூவுநீரும் கண்டு
நக்கு நிற்பர் அவர்தம்மை நாணியே
(10)
விறகில் தீயினன் பாலில் படுநெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவு கோல்நட்டு உணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page