(1)
வெந்த வெண்ணீறணிந்து, விரிநூல் திகழ்மார்பில் நல்ல
பந்தணவும் விரலாள் ஒருபாகம் அமர்ந்தருளிக்
கொந்தணவும் பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
அந்தணனைத் தொழுவார் அவலம் அறுப்பாரே
(2)
அலைமலி தண்புனலோடரவம் சடைக்கணிந்து, ஆகம்
மலைமகள் கூறுடையான், மலையார் இளவாழைக்
குலைமலி தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
தலைமகனைத் தொழுவார் தடுமாற்றறுப்பாரே
(3)
பாலன நீறுபுனை திகழ்மார்பில் பல்வளைக்கை நல்ல
ஏல மலர்க்குழலாள் ஒருபாகம் அமர்ந்தருளிக்
கோல மலர்ப்பொழில் சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மல்கும்
நீலநன் மாமிடற்றான் கழலேத்தல் நீதியே
(4)
வாருறு கொங்கைநல்ல மடவாள் திகழ்மார்பில் நண்ணும்
காருறு கொன்றையொடும் கதநாகம் பூண்டருளிச்
சீருறும் அந்தணர்வாழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
நீருறு செஞ்சடையான் கழலேத்தல் நீதியே
(5)
பொன்திகழ் ஆமையொடு புரிநூல் திகழ்மார்பில், நல்ல
பன்றியின் கொம்பணிந்து பணைத்தோளியோர் பாகமாகக்
குன்றன மாளிகைசூழ் கொடிமாடச் செங்குன்றூர் வானில்
மின்திகழ் செஞ்சடையான் கழலேத்தல் மெய்ப்பொருளே
(6)
ஓங்கிய மூவிலைநற் சூலம் ஒருகையன், சென்னி
தாங்கிய கங்கையொடு மதியம் சடைக்கணிந்து
கோங்கணவும் பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் வாய்ந்த
பாங்கன தாள் தொழுவார் வினையாய பற்றறுமே
(7)
நீடலர் கொன்றையொடு நிமிர்புன் சடைதாழ, வெள்ளை
வாடலுடை தலையில் பலிகொள்ளும் வாழ்க்கையனாய்க்
கோடல் வளம்புறவில் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
சேடன தாள்தொழுவார் வினையாய தேயுமே
(8)
மத்தநன் மாமலரும் மதியும்வளர் கொன்றையுடன் துன்று
தொத்தலர் செஞ்சடைமேல் துதைய உடன்சூடிக்
கொத்தலர் தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மேய
தத்துவனைத் தொழுவார் தடுமாற்றறுப்பாரே
(9)
செம்பொனின் மேனியனாம் பிரமன் திருமாலும் தேட நின்ற
அம்பவளத் திரள்போல் ஒளியாய ஆதிபிரான்
கொம்பணவும் பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மேய
நம்பன தாள்தொழுவார் வினையாய நாசமே
(10)
போதியர் பிண்டியர் என்றிவர்கள் புறம்கூறும் பொய்ந்நூல்
ஓதிய கட்டுரை கேட்டுழல்வீர், வரிக்குயில்கள்
கோதிய தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
வேதியனைத் தொழ நும் வினையான வீடுமே
(11)
அலைமலி தண்புனல்சூழ்ந்த அழகார் புகலிநகர் பேணும்
தலைமகனாகி நின்ற தமிழ்ஞான சம்பந்தன்
கொலைமலி மூவிலையான் கொடிமாடச் செங்குன்றூர் ஏத்தும்
நலமலி பாடல் வல்லார் வினையான நாசமே