(1)
நீற்றினையும் நெற்றிமேல் இட்டார் போலும்
நீங்காமே வெள்ளெலும்பு பூண்டார் போலும்
காற்றினையும் கடிதாக நடந்தார் போலும்
கண்ணின்மேல் கண்ணொன்றுடையார் போலும்
கூற்றினையும் குரைகழலால் உதைத்தார் போலும்
கொல்புலித் தோலாடைக் குழகர் போலும்
ஆற்றினையும் செஞ்சடைமேல் வைத்தார் போலும்
அணியாரூர்த் திருமூலட்டானனாரே
(2)
பரியதோர் பாம்பரை மேல்ஆர்த்தார் போலும்
பாசுபதம் பார்த்தற்களித்தார் போலும்
கரியதோர் களிற்றுரிவை போர்த்தார் போலும்
கபாலம் கட்டங்கக் கொடியார் போலும்
பெரியதோர் மலைவில்லா எய்தார் போலும்
பேர்நந்தி என்னும் பெயரார் போலும்
அரியதோர் அரணங்கள் அட்டார் போலும்
அணியாரூர்த் திருமூலட்டானனாரே
(3)
துணியுடையர் தோலுடையர் என்பார் போலும்
தூய திருமேனிச் செல்வர் போலும்
பிணியுடைய அடியாரைத் தீர்ப்பார் போலும்
பேசுவார்க்கெல்லாம் பெரியார் போலும்
மணியுடைய மாநாகம் ஆர்ப்பார் போலும்
வாசுகி மா நாணாக வைத்தார் போலும்
அணியுடைய நெடுவீதி நடப்பார் போலும்
அணியாரூர்த் திருமூலட்டானனாரே
(4)
ஓட்டகத்தே ஊணாக உகந்தார் போலும்
ஓருருவாய்த் தோன்றி உயர்ந்தார் போலும்
நாட்டகத்தே நடைபலவும் நவின்றார் போலும்
ஞானப் பெருங்கடற்கோர் நாதர் போலும்
காட்டகத்தே ஆடல் உடையார் போலும்
காமரங்கள் பாடித் திரிவார் போலும்
ஆட்டகத்தில் ஆனைந்துகந்தார் போலும்
அணியாரூர்த் திருமூலட்டானனாரே
(5)
ஏனத்திள மருப்புப் பூண்டார் போலும்
இமையவர்கள் ஏத்த இருந்தார் போலும்
கானக் கல்லால்கீழ் நிழலார் போலும்
கடல்நஞ்சம் உண்டிருண்ட கண்டர் போலும்
வானத்திள மதிசேர் சடையார் போலும்
வான்கயிலை வெற்பில் மகிழ்ந்தார் போலும்
ஆனத்து முன்னெழுத்தாய் நின்றார் போலும்
அணியாரூர்த் திருமூலட்டானனாரே
(6)
காமனையும் கரியாகக் காய்ந்தார் போலும்
கடல்நஞ்சம் உண்டிருண்ட கண்டர் போலும்
சோமனையும் செஞ்சடைமேல் வைத்தார் போலும்
சொல்லாகிச் சொற்பொருளாய் நின்றார் போலும்
நாமனையும் வேதத்தார் தாமே போலும்
நங்கைஓர்பால் மகிழ்ந்த நம்பர் போலும்
ஆமனையும் திருமுடியார் தாமே போலும்
அணியாரூர்த் திருமூலட்டானனாரே
(7)
முடியார் மதியரவம் வைத்தார் போலும்
மூவுலகும் தாமேயாய் நின்றார் போலும்
செடியார் தலைப்பலி கொண்டுழல்வார் போலும்
செல்கதிதான் கண்ட சிவனார் போலும்
கடியார் நஞ்சுண்டிருண்ட கண்டர் போலும்
கங்காள வேடக் கருத்தர் போலும்
அடியார் அடிமை உகப்பார் போலும்
அணியாரூர்த் திருமூலட்டானனாரே
(8)
இந்திரத்தை இனிதாக ஈந்தார் போலும்
இமையவர்கள் வந்திறைஞ்சும் இறைவர் போலும்
சுந்தரத்த பொடிதன்னைத் துதைந்தார் போலும்
தூத்தூய திருமேனித் தோன்றல் போலும்
மந்திரத்தை மனத்துள்ளே வைத்தார் போலும்
மாநாகம் நாணாக வளைத்தார் போலும்
அந்திரத்தே அணியா நஞ்சுண்டார் போலும்
அணியாரூர்த் திருமூலட்டானனாரே
(9)
பிண்டத்தைக் காக்கும் பிரானார் போலும்
பிறவி இறவி இலாதார் போலும்
முண்டத்து முக்கண் உடையார் போலும்
முழுநீறு பூசும் முதல்வர் போலும்
கண்டத்திறையே கறுத்தார் போலும்
காளத்தி காரோணம் மேயார் போலும்
அண்டத்துக்கப்புறமாய் நின்றார் போலும்
அணியாரூர்த் திருமூலட்டானனாரே
(10)
ஒருகாலத்தொன்றாகி நின்றார் போலும்
ஊழி பலகண்டு இருந்தார் போலும்
பெருகாமே வெள்ளம் தவிர்த்தார் போலும்
பிறப்பிடும்பை சாக்காடொன்றில்லார் போலும்
உருகாதார் உள்ளத்து நில்லார் போலும்
உகப்பார் மனத்தென்றும் நீங்கார் போலும்
அருகாக வந்தென்னை அஞ்சேல் என்பார்
அணியாரூர்த் திருமூலட்டானனாரே
(11)
நன்றாக நடைபலவும் நவின்றார் போலும்
ஞானப் பெருங்கடற்கோர் நாதர் போலும்
கொன்றாகிக் கொன்றதொன்று உண்டார் போலும்
கோளரக்கர் கோன் தலைகள் குறைத்தார் போலும்
சென்றார் திரிபுரங்கள் எய்தார் போலும்
திசையனைத்துமாய் அனைத்தும் ஆனார் போலும்
அன்றாகில் ஆயிரம் பேரார் போலும்
அணியாரூர்த் திருமூலட்டானனாரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...