(குறிப்பு: அப்பர் சுவாமிகளால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)
(அப்பர் தேவாரம்):
(1)
மாதினையோர் கூறுகந்தாய், மறைகொள் நாவா
மதிசூடீ, வானவர்கள் தங்கட்கெல்லாம்
நாதனே என்றென்று பரவி நாளும்
நைஞ்சுருகி வஞ்சகமற்று அன்பு கூர்ந்து
வாதனையால் முப்பொழுதும் பூநீர் கொண்டு
வைகல் மறவாது வாழ்த்தியேத்திக்
காதன்மையால் தொழும்அடியார் நெஞ்சினுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே
(2)
விடிவதுமே வெண்ணீற்றை மெய்யில் பூசி
வெளுத்தமைந்த கீளொடு கோவணமும் தற்றுச்
செடியுடைய வல்வினைநோய் தீர்ப்பாய் என்றும்
செல்கதிக்கு வழிகாட்டும் சிவனே என்றும்
துடியனைய இடைமடவாள் பங்கா என்றும்
சுடலைதனில் நடமாடும் சோதீ என்றும்
கடிமலர் தூய்த் தொழும்அடியார் நெஞ்சினுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே
(3)
எவரேனும் தாமாக இலாடத்திட்ட
திருநீறும் சாதனமும் கண்டால்உள்கி
உவராதே அவரவரைக் கண்ட போதே
உகந்தடிமைத் திறம் நினைந்தங்குவந்து நோக்கி
இவர்தேவர் அவர்தேவர் என்று சொல்லி
இரண்டாட்டாதொழிந்து, ஈசன் திறமே பேணிக்
கவராதே தொழும்அடியார் நெஞ்சினுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே
(4)
இலங்காலஞ் செல்லாநாள் என்று நெஞ்சத்து
இடையாதே யாவர்க்கும் பிச்சையிட்டு
விலங்காதே நெறி நின்றங்கறிவே மிக்கு
மெய்யன்பு புகப்பெய்து பொய்யை நீக்கித்
துலங்காமெய் வானவரைக் காத்து நஞ்சம்
உண்டபிரான் அடியிணைக்கே சித்தம் வைத்துக்
கலங்காதே தொழும்அடியார் நெஞ்சினுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே
(5)
விருத்தனே, வேலைவிடம் உண்ட கண்டா
விரிசடைமேல் வெண்திங்கள் விளங்கச் சூடும்
ஒருத்தனே, உமைகணவா, உலக மூர்த்தீ
நுந்தாத ஒண்சுடரே, அடியார் தங்கள்
பொருத்தனே என்றென்று புலம்பி நாளும்
புலனைந்தும் அகத்தடக்கிப் புலம்பி நோக்கிக்
கருத்தினால் தொழும்அடியார் நெஞ்சினுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே
(6)
பொசியினால் மிடைந்துபுழுப் பொதிந்த போர்வைப்
பொல்லாத புலாலுடம்பை நிலாசுமென்று
பசியினால் மீதூரப் பட்டே ஈட்டிப்
பலர்க்குதவல் அதுஒழிந்து, பவள வாயார்
வசியினால் அகப்பட்டு வீழா முன்னம்
வானவர்கோன் திருநாமம் அஞ்சும் சொல்லிக்
கசிவினால் தொழும்அடியார் நெஞ்சினுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே
(7)
ஐயினால் மிடறடைப்புண்டு ஆக்கை விட்டு
ஆவியார் போவதுமே அகத்தார் கூடி
மையினால் கண்ணெழுதி மாலை சூட்டி
மயானத்தில் இடுவதன்முன், மதியம் சூடும்
ஐயனார்க்காளாகி அன்பு மிக்கு
அகங்குழைந்து மெய்யரும்பி அடிகள் பாதம்
கையினால் தொழும்அடியார் நெஞ்சினுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே
(8)
திருதிமையால் ஐவரையும் காவல்ஏவித்
திகையாதே சிவாயநம என்னும் சிந்தைச்
சுருதிதனைத் துயக்கறுத்துத் துன்ப வெள்ளக்
கடல்நீந்திக் கரையேறும் கருத்தே மிக்குப்
பரிதிதனைப் பல்பறித்த பாவநாசா
பரஞ்சுடரே என்றென்று பரவி நாளும்
கருதிமிகத் தொழுமடியார் நெஞ்சினுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே
(9)
—
(10)
குனிந்த சிலையால் புரமூன்றெரித்தாய் என்றும்
கூற்றுதைத்த குரைகழல் சேவடியாய் என்றும்
தனஞ்சயற்குப் பாசுபதம் ஈந்தாய் என்றும்
தசக்கிரிவன் மலையெடுக்க விரலால் ஊன்றி
முனிந்தவன்தன் சிரம்பத்தும் தாளும் தோளும்
முரணழித்திட்டருள் கொடுத்த மூர்த்தீ என்றும்
கனிந்துமிகத் தொழுமடியார் நெஞ்சினுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...