திருவெண்டுறை:

<– சோழ நாடு (காவிரி தென்கரை)

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சம்பந்தர் தேவாரம்):

(1)
ஆதியன் ஆதிரையன், அனலாடிய ஆரழகன்
பாதியொர் மாதினொடும் பயிலும் பரமா பரமன்
போதியலும் முடிமேல் புனலோட அரவம் புனைந்த
வேதியன், மாதிமையால் விரும்பும் இடம் வெண்டுறையே
(2)
காலனை ஓர்உதையில் உயிர் வீடுசெய் வார்கழலான்
பாலொடு நெய்தயிரும் பயின்றாடிய பண்டரங்கன்
மாலை மதியொடு நீர்அரவம் புனை வார்சடையான்
வேலன கண்ணியொடும் விரும்பும் இடம் வெண்டுறையே
(3)
படைநவில் வெண்மழுவான், பலபூதப் படையுடையான்
கடைநவில் மும்மதிலும் எரியூட்டிய கண்ணுதலான்
உடை நவிலும் புலித்தோலுடை ஆடையினான், கடிய
விடை நவிலும் கொடியான், விரும்பும் இடம் வெண்டுறையே
(4)
பண்ணமர் வீணையினான், பரவிப்பணி தொண்டர்கள்தம்
எண்ணமர் சிந்தையினான், இமையோர்க்கும் அறிவரியான்
பெண்ணமர் கூறுடையான், பிரமன் தலையில் பலியான்
விண்ணவர் தம்பெருமான் விரும்பும் இடம் வெண்டுறையே
(5)
பாரியலும் பலியான், படியார்க்கும் அறிவரியான்
சீரியலும் மலையாள்ஒரு பாகமும் சேர வைத்தான்
போரியலும் புரமூன்றுடன் பொன் மலையே சிலையா
வீரியம் நின்று செய்தான் விரும்பும் இடம் வெண்டுறையே
(6)
ஊழிகளாய் உலகாய் ஒருவர்க்கும் உணர்வரியான்
போழிள வெண்மதியும் புனலும்அணி புன்சடையான்
யாழின் மொழிஉமையாள் வெருவ எழில் வெண்மருப்பின்
வேழமுரித்த பிரான் விரும்பும் இடம் வெண்டுறையே
(7)
கன்றிய காலனையும் உருளக் கனல் வாயலறிப்
பொன்ற முனிந்த பிரான், பொடியாடிய மேனியினான்
சென்று இமையோர் பரவும் திகழ் சேவடியான், புலன்கள்
வென்றவன் எம்இறைவன் விரும்பும்இடம் வெண்டுறையே
(8)
கரம்இரு பத்தினாலும் கடு வன்சினமாய் எடுத்த
சிரமொரு பத்துமுடைய அரக்கன் வலி செற்றுகந்தான்
பரவ வல்லார் வினைகள் அறுப்பான், ஒரு பாகமும்பெண்
விரவிய வேடத்தினான் விரும்பும் இடம் வெண்டுறையே
(9)
கோல மலர்அயனும், குளிர் கொண்டல் நிறத்தவனும்
சீலம் அறிவரிதாய்த் திகழ்ந்தோங்கிய செந்தழலான்
மூலமதாகி நின்றான், முதிர் புன்சடை வெண்பிறையான்
வேலை விடமிடற்றான் விரும்பும் இடம் வெண்டுறையே
(10)
நக்குருவாய அருந்துவராடை நயந்துடையாம்
பொக்கர்கள் தம்முரைகள் அவை பொய்யென எம்இறைவன்
திக்கு நிறை புகழார்தரு தேவர் பிரான், கனகம்
மிக்குயர் சோதியவன் விரும்பும்இடம் வெண்டுறையே
(11)
திண்ணமரும் புரிசைத் திருவெண்டுறை மேயவனைத்
தண்ணமரும் பொழில்சூழ் தரு சண்பையர் தம்தலைவன்
எண்ணமர் பல்கலையால் இசை ஞானசம்பந்தன் சொன்ன
பண்ணமர் பாடல்வல்லார் வினையாயின பற்றறுமே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page