திருக்கடவூர் – சுந்தரர் தேவாரம்:

<– திருக்கடவூர்

(1)
பொடியார் மேனியனே, புரிநூல் ஒருபால் பொருந்த
வடியார் மூவிலைவேல் வளர்அங்கையில், மங்கையொடும்
கடியார் கொன்றையனே, கடவூர்தனுள் வீரட்டத்தெம்
அடிகேள் என்னமுதே எனக்கார் துணை நீயலதே
(2)
பிறையாரும் சடையாய், பிரமன் தலையில் பலிகொள்
மறையார் வானவனே, மறையின் பொருள்ஆனவனே
கறையாரும் மிடற்றாய், கடவூர்தனுள் வீரட்டத்தெம்
இறைவா என்னமுதே, எனக்கார் துணை நீயலதே
(3)
அன்றாலின் நிழல்கீழ் அறம் நால்வர்க்கருள்புரிந்து
கொன்றாய் காலனுயிர், கொடுத்தாய் மறையோனுக்கு, மான்
கன்றாரும் கரவா, கடவூர்த் திருவீரட்டத்துள்
என்தாதை பெருமான் எனக்கார் துணை நீயலதே
(4)
போராரும் கரியின் உரிபோர்த்துப், பொன்மேனியின்மேல்
வாராரும் முலையாள் ஒரு பாகம் மகிழ்ந்தவனே
காராரும் மிடற்றாய், கடவூர்தனுள் வீரட்டானத்து
ஆரா என்னமுதே எனக்கார் துணை நீயலதே
(5)
மையார் கண்டத்தினாய், மதமா உரி போர்த்தவனே
பொய்யாதென் உயிருள் புகுந்தாய், இன்னம் போந்தறியாய்
கையார் ஆடரவா, கடவூர்தனுள் வீரட்டத்தெம்
ஐயா என்னமுதே எனக்கார் துணை நீயலதே
(6)
மண்ணீர் தீவெளிகால் வரு பூதங்களாகி மற்றும்
பெண்ணோடு ஆண்அலியாய்ப் பிறவா உருவானவனே
கண்ணாருண் மணியே, கடவூர்தனுள் வீரட்டத்தெம்
அண்ணா என்னமுதே எனக்கார் துணை நீயலதே
(7)
எரியார் புன்சடைமேல் இளநாகம் அணிந்தவனே
நரியாரும் சுடலை நகுவெண்தலை கொண்டவனே
கரியாய் ஈருரியாய், கடவூர்தனுள் வீரட்டத்தெம்
அரியாய் என்னமுதே எனக்கார் துணை நீஅலதே
(8)
வேறா உன்னடியேன், விளங்கும் குழைக் காதுடையாய்
தேறேன் உன்னை அல்லால், சிவனே என் செழுஞ்சுடரே
காறார் வெண்மருப்பா, கடவூர்த் திருவீரட்டத்துள்
ஆறார் செஞ்சடையாய் எனக்கார் துணை நீயலதே
(9)
அயனோடு அன்றெரியும் அடியும் முடி காண்பரிய
பயனே எம்பரனே, பரமாய பரஞ்சுடரே
கயமாரும் சடையாய், கடவூர்த் திருவீரட்டத்துள்
அயனே என்னமுதே எனக்கார் துணை நீயலதே
(10)
காராரும் பொழில்சூழ் கடவூர்த் திருவீரட்டத்துள்
ஏராரும் இறையைத் துணையா எழில் நாவலர்கோன்
ஆரூரன் அடியான் அடித் தொண்டன் உரைத்ததமிழ்
பாரோர் ஏத்தவல்லார் பரலோகத்திருப்பாரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page