(1)
அப்பன்நீ அம்மைநீ ஐயனும்நீ
அன்புடைய மாமனும் மாமியும்நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும்நீ
ஒருகுலமும் சுற்றமும் ஓரூரும்நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய்நீ
துணையாய்என் நெஞ்சம் துறப்பிப்பாய்நீ
இப்பொன்நீ இம்மணிநீ இம்முத்தும்நீ
இறைவன்நீ ஏறூர்ந்த செல்வன் நீயே
(2)
வெம்ப வருகிற்பதன்று கூற்றம் நம்மேல்
வெய்ய வினைப்பகையும் பைய நையும்
எம் பரிவும் தீர்ந்தோம், இடுக்கண் இல்லோம்
எங்கெழில்என் ஞாயிறு எளியோம் அல்லோம்
அம்பவளச் செஞ்சடைமேல் ஆறு சூடி
அனலாடி, ஆனஞ்சும் ஆட்டுகந்த
செம்பவள வண்ணர் செங்குன்ற வண்ணர்
செவ்வான வண்ணர் என் சிந்தையாரே
(3)
ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே
அடக்குவித்தால் ஆரொருவர் அடங்காதாரே
ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடாதாரே
உருகுவித்தால் ஆரொருவர் உருகாதாரே
பாட்டுவித்தால் ஆரொருவர் பாடாதாரே
பணிவித்தால் ஆரொருவர் பணியாதாரே
காட்டுவித்தால் ஆரொருவர் காணாதாரே
காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக்காலே
(4)
நற்பதத்தார் நற்பதமே ஞான மூர்த்தீ
நலஞ்சுடரே, நால்வேதத்தப்பால் நின்ற
சொற்பதத்தார் சொற்பதமும் கடந்து நின்ற
சொலற்கரிய சூழலாய், இதுவுன் தன்மை
நிற்பதொத்து நிலையிலா நெஞ்சம் தன்னுள்
நிலாவாத புலால்உடம்பே புகுந்து நின்ற
கற்பகமே, யான்உன்னை விடுவேன் அல்லேன்
கனகமாமணி நிறத்தெம் கடவுளானே
(5)
திருக்கோயில் இல்லாத திருவிலூரும்
திருவெண்ணீறணியாத திருவிலூரும்
பருக்கோடிப் பத்திமையால் பாடா ஊரும்
பாங்கினோடு பலதளிகள் இல்லா ஊரும்
விருப்போடு வெண்சங்கம் ஊதா ஊரும்
விதானமும் வெண்கொடியும் இல்லா ஊரும்
அருப்போடு மலர் பறித்திட்டுண்ணா ஊரும்
அவையெல்லாம் ஊரல்ல அடவி காடே
(6)
திருநாமம் அஞ்செழுத்தும் செப்பாராகில்
தீவண்ணர் திறமொருகால் பேசாராகில்
ஒருகாலும் திருக்கோயில் சூழாராகில்
உண்பதன்முன் மலர் பறித்திட்டு உண்ணாராகில்
அருநோய்கள் கெட வெண்ணீறணியாராகில்
அளியற்றார் பிறந்தவாறேதோ என்னில்
பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்தும் செத்தும்
பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே
(7)
நின்னாவார் பிறரின்றி நீயே ஆனாய்
நினைப்பார்கள் மனத்துக்கோர் வித்துமானாய்
மன்னானாய் மன்னவர்க்கோர் அமுதமானாய்
மறைநான்கும் ஆனாய், ஆறங்கமானாய்
பொன்னானாய் மணியானாய் போகமானாய்
பூமிமேல் புகழ்தக்க பொருளே உன்னை
என்னானாய் என்னானாய் என்னின் அல்லால்
ஏழையேன் என்சொல்லி ஏத்துகேனே
(8)
அத்தாஉன் அடியேனை அன்பால் ஆர்த்தாய்
அருள்நோக்கில் தீர்த்த நீராட்டிக் கொண்டாய்
எத்தனையும் அரியைநீ எளியை ஆனாய்
எனையாண்டு கொண்டிரங்கி ஏன்று கொண்டாய்
பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன்
பிழைத்தனகள் அத்தனையும் பொறுத்தாயன்றே
இத்தனையும் எம்பரமோ ஐயஐயோ
எம்பெருமான் திருக்கருணை இருந்தவாறே
(9)
குலம்பொல்லேன், குணம்பொல்லேன், குறியும் பொல்லேன்
குற்றமே பெரிதுடையேன் கோலமாய
நலம்பொல்லேன், நான்பொல்லேன், ஞானியல்லேன்
நல்லாரோடிசைந்திலேன், நடுவே நின்ற
விலங்கல்லேன், விலங்கல்லாது ஒழிந்தேன் அல்லேன்
வெறுப்பனவும் மிகப்பெரிதும் பேச வல்லேன்
இலம்பொல்லேன், இரப்பதே ஈய மாட்டேன்
என்செய்வான் தோன்றினேன் ஏழையேனே
(10)
சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து
தரணியொடு வானாளத் தருவரேனும்
மங்குவார் அவர்செல்வம் மதிப்போம் அல்லோம்
மாதேவர்க்கேகாந்தர் அல்லாராகில்
அங்கமெலாம் குறைந்தழுகு தொழுநோயராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்
கங்கைவார் சடைக் கரந்தார்க்கன்பராகில்
அவர்கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...