நினைந்த நேரிசை:
(1)
முத்தினை மணியைப் பொன்னை, முழுமுதல் பவளம் ஏய்க்கும்
கொத்தினை, வயிர மாலைக் கொழுந்தினை, அமரர் சூடும்
வித்தினை, வேத வேள்விக் கேள்வியை விளங்க நின்ற
அத்தனை, நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே
(2)
முன்பனை, உலகுக்கெல்லா மூர்த்தியை, முனிகளேத்தும்
இன்பனை, இலங்கு சோதி இறைவனை, அரிவை யஞ்ச
வன்பனைத் தடக்கை வேள்விக் களிற்றினை உரித்த எங்கள்
அன்பனை, நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே
(3)
கரும்பினும் இனியான் தன்னைக், காய்கதிர்ச் சோதியானை
இருங்கடல் அமுதம் தன்னை இறப்பொடு பிறப்பிலானைப்
பெரும்பொருள் கிளவியானைப், பெருந்தவ முனிவரேத்தும்
அரும்பொனை, நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே
(4)
செருத்தனை, அருத்தி செய்து செஞ்சரம் செலுத்தி ஊர்மேல்
கருத்தனைக், கனக மேனிக் கடவுளைக், கருதும் வானோர்க்கு
ஒருத்தனை, ஒருத்தி பாகம் பொருத்தியும் இருத்தி தீரா
நிருத்தனை, நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்தவாறே
(5)
கூற்றினை உதைத்த பாதக் குழகனை, மழலை வெள்ளேறு
ஏற்றனை, இமையோரேத்த இருஞ்சடைக் கற்றை தன்மேல்
ஆற்றனை, அடியரேத்தும் அமுதனை அமுதயோக
நீற்றனை, நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்தவாறே
(6)
கருப்பனைத் தடக்கை வேழக் களிற்றினை உரித்த கண்டன்
விருப்பனை, விளங்கு சோதி வியன்கயிலாயம் என்னும்
பொருப்பனைப், பொருப்பன் மங்கை பங்கனை, அங்கையேற்ற
நெருப்பனை, நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்தவாறே
(7)
நீதியால் நினைப்புளானை, நினைப்பவர் மனத்துளானைச்
சாதியைச் சங்க வெண்ணீற்றண்ணலை, விண்ணில் வானோர்
சோதியைத், துளக்கமில்லா விளக்கினை, அளக்கலாகா
ஆதியை, நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே
(8)
பழகனை, உலகுக்கெல்லாம் பருப்பனைப், பொருப்போடொக்கும்
மழகளி யானையின் தோல் மலைமகள் நடுங்கப் போர்த்த
குழகனைக், குழவித் திங்கள் குளிர்சடை மருவ வைத்த
அழகனை, நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே
(9)
விண்ணிடை மின்னொப்பானை, மெய்ப்பெரும் பொருள் ஒப்பானைக்
கண்ணிடை மணிஒப்பானைக் கடுஇருள் சுடரொப்பானை
எண்ணிடை எண்ணலாகா இருவரை வெருவ நீண்ட
அண்ணலை, நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே
(10)
உரவனைத் திரண்ட திண்தோள் அரக்கனை ஊன்றி மூன்றூர்
நிரவனை, நிமிர்ந்த சோதி நீள்முடி அமரர் தங்கள்
குரவனைக், குளிர்வெண் திங்கள் சடையிடைப் பொதியும் ஐவாய்
அரவனை, நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...