தனித் திருநேரிசை:
(1)
கடும்பகல் நட்டமாடிக் கையிலோர் கபாலமேந்தி
இடும்பலிக்கில்லம் தோறும் உழிதரும் இறைவனீரே
நெடும்பொறை மலையர் பாவை நேரிழை நெறிமென் கூந்தல்
கொடுங்குழை புகுந்த அன்றும் கோவணம் அரையதேயோ
(2)
கோவணம் உடுத்தவாறும், கோளரவசைத்தவாறும்
தீவணச் சாம்பர் பூசித் திருவுரு இருந்தவாறும்
பூவணக் கிழவனாரைப் புலியுரி அரையனாரை
ஏவணச் சிலையினாரை யாவரே எழுதுவாரே
(3)
விளக்கினார் பெற்ற இன்பம், மெழுக்கினால் பதிற்றியாகும்
துளக்கிநல் மலர்தொடுத்தால் தூய விண்ணேறலாகும்
விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ஞ்ஞெறி ஞானமாகும்
அளப்பில கீதம் சொன்னார்க்கடிகள் தாம் அருளுமாறே
(4)
சந்திரற் சடையில் வைத்த சங்கரன் சாமவேதி
அந்தரத்தமரர் பெம்மான் ஆனல் வெள்ளூர்தியான் தன்
மந்திர நமச்சிவாய ஆகநீறணியப் பெற்றால்
வெந்தறும் வினையும் நோயும் வெவ்வழல் விறகிட்டன்றே
(5)
புள்ளுவர் ஐவர் கள்வர் புனத்திடைப் புகுந்து நின்று
துள்ளுவர் சூறை கொள்வர், தூநெறி விளைய ஒட்டார்
முள்ளுடை அவர்கள் தம்மை முக்கணான் பாதநீழல்
உள்ளிடை மறைந்து நின்றங்குணர்வினால் எய்யலாமே
(6)
தொண்டனேன் பிறந்து வாளாத் தொல்வினைக் குழியில் வீழ்ந்து
பிண்டமே சுமந்து நாளும் பெரியதோர் அவாவில் பட்டேன்
அண்டனே அமரர் கோவே, அறிவனே அஞ்சலென்னாய்
தெண்திரைக் கங்கை சூடும் திகழ்தரு சடையினானே
(7)
பாறினாய் பாவி நெஞ்சே, பன்றிபோல் அளற்றில் பட்டுத்
தேறிநீ நினைதியாயில், சிவகதி திண்ணமாகும்
ஊறலே உவர்ப்பு நாறி, உதிரமே ஒழுகும் வாசல்
கூறையால் மூடக் கண்டு கோலமாக் கருதினாயே
(8)
உய்த்தகால் உதயத்தும்பர் உமையவள் நடுக்கம் தீர
வைத்தகால் அரக்கனோ தன் வான்முடி தனக்கு நேர்ந்தான்
மொய்த்தகால் முகிழ்வெண் திங்கள் மூர்த்தியென் உச்சி தன்மேல்
வைத்தகால் வருந்துமென்று வாடிநான் ஒடுங்கினேனே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...