திருப்புகலூர் – அப்பர் தேவாரம் (22) – (பொது):

<– திருப்புகலூர்

தனித் திருவிருத்தம்:

(1)
பவளத் தடவரை போலும் திண்தோள்கள், அத்தோள் மிசையே
பவளக் குழைதழைத்தால் ஒக்கும் பல்சடை, அச்சடைமேல்
பவளக் கொழுந்தன்ன பைம்முக நாகம், அந்நாகத்தொடும்
பவளக்கண் வாலமதி எந்தை சூடும் பனிமலரே
(2)
முருகார் நறுமலர் இண்டை தழுவி வண்டே முரலும்
பெருகு ஆறடை சடைக் கற்றையினாய், பிணி மேய்ந்திருந்த
இருகால் குரம்பையிது நான் உடையது, இதுபிரிந்தால்
தருவாய் எனக்குன் திருவடிக் கீழொர் தலைமறைவே
(3)
மூவா உருவத்து முக்கண் முதல்வ, மீக்கூர் இடும்பை
காவாய் எனக் கடைதூங்கு மணியைக் கையால் அமரர்
நாவாய் அசைத்தஒலி ஒலி மாறியதில்லை, அப்பால்
தீவாய் எரிந்து பொடியாய்க் கழிந்த திரிபுரமே
(4)
பந்தித்த பாவங்கள் அம்மையில் செய்தன இம்மைவந்து
சந்தித்த பின்னைச் சமழ்ப்பதென்னே, வந்தமரர் முன்னாள்
முந்திச் செழுமலரிட்டு முடி தாழ்த்தடிவணங்கும்
நந்திக்கு முந்துற ஆட்செய்கிலா விட்ட நன்னெஞ்சமே
(5)
அந்திவட்டத்திளம் கண்ணியன், ஆறமர் செஞ்சடையான்
புந்திவட்டத்திடைப் புக்கு நின்றானையும் பொய்யென்பனோ
சந்திவட்டச் சடைக்கற்றை அலம்பச் சிறிதலர்ந்த
நந்திவட்டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே
(6)
உன்மத்தக மலர் சூடி உலகம்தொழச் சுடலைப்
பன்மத்தகம் கொண்டு பல்கடை தோறும் பலிதிரிவான்
என்மத்தகத்தே இரவும் பகலும் பிரிவரியான்
தன்மத்தகத்தொர் இளம்பிறை சூடிய சங்கரனே
(7)
அரைப்பால் உடுப்பன கோவணச் சின்னங்கள், ஐயமுணல்
வரைப்பாவையை க்கொண்டது எக்குடி வாழ்க்கைக்கு, வானிரைக்கும்
இரைப்பா படுதலை ஏந்து கையா, மறை தேடும் எந்தாய்
உரைப்பார் உரைப்பனவே செய்தியால் எங்கள் உத்தமனே
(8)
துறக்கப்படாத உடலைத் துறந்து வெந்தூதுவரோடு
இறப்பன், இறந்தால் இரு விசும்பபேறுவன், ஏறிவந்து
பிறப்பன், பிறந்தால் பிறையணி வார்சடைப் பிஞ்ஞகன்பேர்
மறப்பன் கொலோ என்றென் உள்ளம் கிடந்து மறுகிடுமே
(9)
வேரி வளாய விரைமலர்க் கொன்றை புனைந்தனகன்
சேரி வளாய என் சிந்தை புகுந்தான், திருமுடிமேல்
வாரி வளாய வருபுனல் கங்கை சடைமறிவாய்
ஏரி வளாவிக் கிடந்தது போலும் இளம் பிறையே
(10)
கன்னெடுங்காலம் வெதும்பிக் கருங்கடள் நீர்சுருங்கிப்
பன்னெடுங்கால மழைதான் மறுக்கினும், பஞ்சம்உண்டென்று
என்னொடும் சூளறும் அஞ்சல் நெஞ்சே, இமையாத முக்கண்
பொன்னெடும் குன்றம் ஒன்றுண்டு கண்டீர் இப்புகலிடத்தே
(11)
மேலும் அறிந்திலன் நான்முகன் மேல்சென்று, கீழிடந்து
மாலும் அறிந்திலன், மாலுற்றதே வழிபாடு செய்யும்
பாலன் மிசைச்சென்று பாசம் விசிறி மறிந்த சிந்தைக்
காலன் அறிந்தான் அறிதற்கரியான் கழலடியே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page