(1)
மைம்மரு பூங்குழல் கற்றைதுற்ற வாள்நுதல் மான்விழி மங்கையோடும்
பொய்ம்மொழியா மறையோர்கள்ஏத்தப் புகலி நிலாவிய புண்ணியனே
எம்இறையே, இமையாத முக்கண் ஈச, என்நேச, இதென்கொல் சொல்லாய்
மெய்ம்மொழி நான்மறையோர் மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே
(2)
கழல்மல்கு பந்தொடு அம்மானை முற்றில் கற்றவர், சிற்றிடைக் கன்னிமார்கள்
பொழில்மல்கு கிள்ளையைச் சொல்பயிற்றும் புகலி நிலாவிய புண்ணியனே
எழில்மலரோன் சிரமேந்திஉண்டு ஓர்இன்புறு செல்வம், இதென்கொல் சொல்லாய்
மிழலையுள் வேதியர் ஏத்திவாழ்த்த விண்ணிழி கோயில் விரும்பியதே
(3)
கன்னியர்ஆடல் கலந்துமிக்க, கந்துக வாடை கலந்து துங்கப்
பொன்னியல் மாடநெருங்கு செல்வப் புகலி நிலாவிய புண்ணியனே
இன்னிசை யாழ் மொழியாளோர் பாகத்து எம்இறையே, இதென்கொல் சொல்லாய்
மின்னிய நுண்ணிடையார் மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே
(4)
நாகபணம் திகழ் அல்குல் மல்கு நன்னுதல் மான்விழி மங்கையோடும்
பூகவனம் பொழில் சூழ்ந்த அந்தண்புகலி நிலாவிய புண்ணியனே
ஏக பெருந்தகையாய, பெம்மான், எம்இறையே, இதென்கொல் சொல்லாய்
மேகம் உரிஞ்சு எயில்சூழ் மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே
(5)
சந்தளறு ஏறு தடங்கொள் கொங்கைத் தையலொடும், தளராத வாய்மைப்
புந்தியினால் மறையோர்கள்ஏத்தும் புகலி நிலாவிய புண்ணியனே
எந்தமை ஆளுடைஈச, எம்மான், எம்இறையே, இதென்கொல் சொல்லாய்
வெந்த வெண்ணீறணிவார் மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே
(6)
சங்கொளி இப்பி சுறாமகரம் தாங்கி நிரந்து தரங்க மேன்மேல்
பொங்கொலி நீர்சுமந்தோங்கு செம்மைப் புகலி நிலாவிய புண்ணியனே
எங்கள்பிரான், இமையோர்கள் பெம்மான், எம்இறையே, இதென்கொல் சொல்லாய்
வெங்கதிர் தோய் பொழில்சூழ் மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே
(7)
காமன் எரிப்பிழம்பாக நோக்கிக், காம்பன தோளியொடும் கலந்து
பூமரு நான்முகன் போல்வர்ஏத்தப் புகலி நிலாவிய புண்ணியனே
ஈமவனத்து எரியாட்டுகந்த எம்பெருமான், இதுஎன்கொல் சொல்லாய்
வீமரு தண்பொழில்சூழ் மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே
(8)
இலங்கையர் வேந்தெழில் வாய்த்த திண்தோள் இற்றலற விரலொற்றி, ஐந்து
புலங்களைக் கட்டவர் போற்ற அந்தண் புகலி நிலாவிய புண்ணியனே
இலங்கெரி ஏந்திநின்று எல்லியாடும் எம்இறையே, இதென்கொல் சொல்லாய்
விலங்கலொள் மாளிகைசூழ் மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே
(9)
செறிமுளரித் தவிசேறியாறும் செற்றதில் வீற்றிருந்தானும், மற்றைப்
பொறிஅரவத்தணையானும் காணாப் புகலி நிலாவிய புண்ணியனே
எறிமழுவோடு இளமான் கையின்றி இருந்தபிரான், இதென்கொல் சொல்லாய்
வெறிகமழ் பூம்பொழில்சூழ் மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே
(10)
பத்தர்கணம் பணிந்தேத்த வாய்த்த பான்மையது அன்றியும், பல்சமணும்
புத்தரும் நின்றலர் தூற்ற அந்தண் புகலி நிலாவிய புண்ணியனே
எத்தவத்தோர்க்கும் இலக்காய் நின்ற எம்பெருமான், இதென்கொல் சொல்லாய்
வித்தகர்வாழ் பொழில்சூழ் மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே
(11)
விண்ணிழி கோயில் விரும்பி மேவும் வித்தகம் என்கொல் இதென்று சொல்லிப்
புண்ணியனைப் புகலிந் நிலாவு பூங்கொடியோடு இருந்தானைப் போற்றி
நண்ணிய கீர்த்தி நலங்கொள் கேள்வி நான்மறை ஞானசம்பந்தன் சொன்ன
பண்ணியல் பாடல்வல்லார்கள் இந்தப் பாரொடுவிண் பரிபாலகரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...