(1)
புவம்வளி கனல்புனல் புவிகலை உரைமறை திரிகுணம் அமர்நெறி
திவமலி தருசுரர் முதலியர் திகழ்தரும் உயிரவை அவைதம
பவமலி தொழிலது நினைவொடு பதுமநல் மலரது மருவிய
சிவனது சிவபுரம் நினைபவர் செழு நிலனினில் நிலை பெறுவரே
(2)
மலைபல வளர்தரு புவியிடை மறைதரு வழிமலி மனிதர்கள்
நிலைமலி சுரர்முதல் உலகுகள் நிலைபெறு வகை நினைவொடு மிகும்
அலைகடல் நடுஅறி துயிலமர் அரியுரு இயல்பரன் உறைபதி
சிலைமலி மதிள் சிவபுரம் நினைபவர் திருமகளொடு திகழ்வரே
(3)
பழுதில கடல்புடை தழுவிய படி முதலிய உலகுகள் மலி
குழுவிய சுரர்பிறர் மனிதர்கள் குலமலி தருமுயிர் அவையவை
முழுவதும் அழிவகை நினைவொடு முதலுரு இயல்பரன் உறைபதி
செழுமணி அணி சிவபுர நகர் தொழுமவர் புகழ்மிகும் உலகிலே
(4)
நறைமலி தரும்அளறொடுமுகை நகுமலர் புகைமிகு வளரொளி
நிறைபுனல் கொடுதனை நினைவொடு நியதமும் வழிபடும் அடியவர்
குறைவில பதம்அணை தரஅருள் குணமுடை இறையுறை வனபதி
சிறைபுனல் அமர் சிவபுரமது நினைபவர் செயமகள் தலைவரே
(5)
சினமலி அறுபகை மிகுபொறி சிதைதரு வகைவளி நிறுவிய
மனன்உணர்வொடு மலர் மிசைஎழு தருபொருள் நியதமும் உணர்பவர்
தனதெழில் உருவது கொடுஅடை தகுபரன் உறைவது நகர்மதிள்
கனமரும் இய சிவபுரம் நினைபவர் கலைமகள் தர நிகழ்வரே
(6)
சுருதிகள் பலநல முதல்கலை துகளறு வகை பயில்வொடு மிகு
உருவியல் உலகவை புகழ்தர வழியொழுகும்எயுறு பொறியொழி
அருதவ முயல்பவர் தனதடி அடைவகை நினைஅரன் உறைபதி
திருவருள் சிவபுரம் நினைபவர் திகழ்குலம் நிலனிடை நிகழுமே
(7)
கதமிகு கருவுருவொடு உகிரிடை வடவரை கணகணவென
மதமிகு நெடுமுகன் அமர்வளை மதிதிகழ் எயிறதன் உதிமிசை
இதமமர் புவியது நிறுவிய எழிலரி வழிபட அருள்செய்த
பதமுடை அவனமர் சிவபுர நினைபவர் நிலவுவர் படியிலே
(8)
அசைவுறு தவமுயல்வினில்அயன் அருளினில் வருவலி கொடுசிவன்
இசை கயிலையை எழுதரு வகை இருபது கரமவை நிறுவிய
நிசிசரன் முடியுடை தரவொரு விரல்பணி கொளுமவன் உறைபதி
திசைமலி சிவபுர நினைபவர் செழுநிலன்இனில் நிகழ்வுடையரே
(9)
அடல்மலி படையரி அயனொடும் அறிவரியதொர் அழல் மலிதரு
சுடருருவொடு நிகழ் தரஅவர் வெருவொடு துதியது செயவெதிர்
விடமலி களநுதல் அமர் கணதுடை உரு வெளிபடும் அவன்நகர்
திடமலி பொழிலெழில் சிவபுர நினைபவர் வழிபுவி திகழுமே
(10)
குணம்அறிவுகள் நிலையில, பொருளுரை மருவிய பொருள்களும் இல
திணமெனும் அவரொடு செதுமதி மிகுசமண் உருமலி தமதுகை
உணலுடை அவருணர் வருபரன் உறைதரு பதியுலகினில் நல
கண மருவிய சிவபுர நினைபவர் எழிலுரு உடையவர்களே
(11)
திகழ்சிவ புரநகர் மருவிய சிவனடி இணைபணி சிரபுர
நகரிறை தமிழ் விரகனதுரை நலமலி ஒருபது நவில்பவர்
நிகழ்குல நிலநிறை திருவுரு நிகரில கொடைமிகு சயமகள்
புகழ்புவி வளர்வழி அடிமையின் மிகைபுணர் தரநல மிகுவரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...