திருத்துருத்தி – அப்பர் தேவாரம்:

<– திருத்துருத்தி

(1)
பொருத்திய குரம்பை தன்னைப் பொருளெனக் கருத வேண்டா
இருத்தி எப்பொழுதும் நெஞ்சுள் இறைவனை ஏத்துமின்கள்
ஒருத்தியைப் பாகம் வைத்தங்கொருத்தியைச் சடையுள் வைத்த
துருத்தியம் சுடரினானைத் தொண்டனேன் கண்டவாறே
(2)
சவைதனைச் செய்து வாழ்வான் சலத்துளே அழுந்துகின்ற
இவையொரு பொருளுமல்ல, இறைவனை ஏத்து மின்னோ
அவைபுர மூன்றும் எய்தும், அடியவர்க்கருளிச் செய்த
சுவையினைத் துருத்தியானைத் தொண்டனேன் கண்டவாறே
(3)
உன்னி எப்போதும் நெஞ்சுள் ஒருவனை ஏத்துமின்னோ
கன்னியை ஒருபால் வைத்துக் கங்கையைச் சடையுள் வைத்துப்
பொன்னியின் நடுவு தன்னுள் பூம்புனல் பொலிந்து தோன்றும்
துன்னிய துருத்தியானைத் தொண்டனேன் கண்டவாறே
(4)
ஊன்தலை வலியனாகி உலகத்துள் உயிர்கட்கெல்லாம்
தான் தலைப்பட்டு நின்று சார்கனல் அகத்து வீழ
வான்தலைத் தேவர் கூடி வானவர்க்கிறைவா என்னும்
தோன்றலைத் துருத்தியானைத் தொண்டனேன் கண்டவாறே
(5)
உடல்தனைத் கழிக்கலுற்ற உலகத்துள் உயிர்கட்கெல்லாம்
இடர்தனைக் கழிய வேண்டில் இறைவனை ஏத்துமின்னோ
கடல்தனில் நஞ்சமுண்டு காண்பரிதாகி நின்ற
சுடர்தனைத் துருத்தியானைத் தொண்டனேன் கண்டவாறே
(6)
அள்ளலைக் கடக்க வேண்டில் அரனையே நினைமினீர்கள்
பொள்ளலிக் காயம் தன்னுள் புண்டரீகத்திருந்த
வள்ளலை வானவர்க்கும் காண்பரிதாகி நின்ற
துள்ளலைத் துருத்தியானைத் தொண்டனேன் கண்டவாறே
(7)
பாதியில் உமையாள் தன்னைப் பாகமா வைத்த பண்பன்
வேதியன் என்று சொல்லி விண்ணவர் விரும்பியேத்தச்
சாதியாம் சதுர்முகனும் சக்கரத்தானும் காணாச்
சோதியைத் துருத்தியானைத் தொண்டனேன் கண்டவாறே
(8)
சாமனை வாழ்க்கையான சலத்துளே அழுந்த வேண்டா
தூமநல் அகிலும் காட்டித் தொழுதடி வணங்குமின்னோ
சோமனைச் சடையுள் வைத்துத் தொன்னெறி பலவும் காட்டும்
தூமனத் துருத்தியானைத் தொண்டனேன் கண்டவாறே
(9)
குண்டரே சமணர் புத்தர் குறியறியாது நின்று
கண்டதே கருதுவார்கள் கருத்தெண்ணாது ஒழிமினீர்கள்
விண்டவர் புரங்கள் எய்து விண்ணவர்க்கருள்கள் செய்த
தொண்டர்கள் துணையினானைத் துருத்திநான் கண்டவாறே
(10)
பிண்டத்தைக் கழிக்க வேண்டில் பிரானையே பிதற்றுமின்கள்
அண்டத்தைக் கழிய நீண்ட அடலரக்கன் தன்ஆண்மை
கண்டொத்துக் கால்விரலால் ஊன்றி மீண்டருளிச் செய்த
துண்டத்துத் துருத்தியானைத் தொண்டனேன் கண்டவாறே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page