(1)
வரைகிலேன் புலன்கள்ஐந்தும், வரைகிலாப் பிறவி மாயப்
புரையிலே அடங்கி நின்று, புறப்படும் வழியும் காணேன்
அரையிலே மிளிரு நாகத்தண்ணலே அஞ்சல்என்னாய்
திரையுலாம் பழனவேலித் திருக்கொண்டீச்சரத்துளானே
(2)
தொண்டனேன் பிறந்து வாளா தொல்வினைக் குழியில் வீழ்ந்து
பிண்டமே சுமந்து நைந்து பேர்வதோர் வழியும் காணேன்
அண்டனே அண்ட வாணா அறிவனே அஞ்சல்என்னாய்
தெண்திரைப் பழனம் சூழ்ந்த திருக்கொண்டீச்சரத்துளானே
(3)
கால் கொடுத்தெலும்பு மூட்டிக், கதிர் நரம்பாக்கை ஆர்த்துத்
தோலுடுத்துதிரம் அட்டித், தொகுமயிர் மேய்ந்த கூரை
ஓலெடுத்துழைஞர் கூடி ஒளிப்பதற்கஞ்சுகின்றேன்
சேலுடைப் பழனம் சூழ்ந்த திருக்கொண்டீச்சரத்துளானே
(4)
கூட்டமாய் ஐவர் வந்து, கொடுந்தொழில் குணத்தராகி
ஆட்டுவார்க்கு ஆற்றகில்லேன், ஆடரவசைத்த கோவே
காட்டிடை அரங்கமாக ஆடிய கடவுளேயோ
சேட்டிரும் பழனவேலித் திருக்கொண்டீச்சரத்துளானே
(5)
பொக்கமாய் நின்ற பொல்லாப் புழுமிடை முடைகொள் ஆக்கை
தொக்கு நின்றைவர் தொண்ணூற்றறுவரும் துயக்கம்எய்த
மிக்கு நின்றிவர்கள் செய்யும் வேதனைக்கலந்து போனேன்
செக்கரே திகழுமேனித் திருக்கொண்டீச்சரத்துளானே
(6)
ஊனுலாம் உடைகொள் ஆக்கை உடை கலமாவதென்றும்
மானுலா மழைக்கணார் தம் வாழ்க்கையை மெய்யென்றெண்ணி
நானெலாம் இனையகால நண்ணிலேன் எண்ணமில்லேன்
தேனுலாம் பொழில்கள் சூழ்ந்த திருக்கொண்டீச்சரத்துளானே
(7)
சாணிரு மடங்கு நீண்ட சழக்குடைப் பதிக்கு நாதர்
வாணிகர் ஐவர் தொண்ணூற்றறுவரும் மயக்கம் செய்து
பேணிய பதியினின்று பெயரும் போதறிய மாட்டேன்
சேணுயர் மாட நீடு திருக்கொண்டீச்சரத்துளானே
(8)
பொய் மறித்தியற்றி வைத்துப் புலால்கமழ் பண்டம் பெய்து
பை மறித்தியற்றி அன்ன பாங்கிலாக் குரம்பை நின்று
கைம்மறித்தனைய ஆவி கழியும் போதறிய மாட்டேன்
செந்நெறிச் செலவு காணேன் திருக்கொண்டீச்சரத்துளானே
(9)
பாலனாய்க் கழிந்த நாளும், பனிமலர்க் கோதைமார் தம்
மேலனாய்க் கழிந்த நாளும், மெலிவொடு மூப்பு வந்து
கோலனாய்க் கழிந்தநாளும் குறிக்கோளிலாது கெட்டேன்
சேலுலாம் பழனவேலித் திருக்கொண்டீச்சரத்துளானே
(10)
விரைதரு கருமென் கூந்தல் விளங்கிழை வேலொண் கண்ணாள்
வெருவர விலங்கைக் கோமான் விலங்கலை எடுத்த ஞான்று
பருவரை அனைய தோளும் முடிகளும் பாறி வீழத்
திருவிரல் ஊன்றினானே திருக்கொண்டீச்சரத்துளானே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...