திருவிளமர்:

<– சோழ நாடு (காவிரி தென்கரை)

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சம்பந்தர் தேவாரம்):

(1)
மத்தகம் அணிபெற மலர்வதொர் மதிபுரை நுதல்கரம்
ஒத்தக நகமணி மிளிர்வதொர் அரவினர் ஒளிகிளர்
அத்தக அடிதொழ அருள்பெறு கண்ணொடும் உமையவள்
வித்தகர் உறைவது விரிபொழில் வளநகர் விளமரே
(2)
பட்டிலகிய முலை அரிவையர் உலகினில் இடுபலி
ஒட்டிலகிணை மரஅடியினர்,  உமையுறு வடிவினர்
சிட்டிலகு அழகிய பொடியினர், விடைமிசை சேர்வதோர்
விட்டிலகு அழகொளி பெயரவர் உறைவது விளமரே
(3)
அங்கதிர் ஒளியினர், அரையிடை மிளிர்வதொர் அரவொடு
செங்கதிரென நிறம் அனையதொர் செழுமணி மார்பினர்
சங்கதிர் பறைகுழல் முழவினொடிசை தரு சரிதையர்
வெங்கதிர் உறுமழு உடையவர் இடமெனில் விளமரே
(4)
மாடமதென வளர் மதிலவை எரிசெய்வர், விரவுசீர்ப்
பீடென வருமறை உரைசெய்வர், பெரியபல் சரிதைகள்
பாடலர், ஆடிய சுடலையில் இடமுற நடநவில்
வேடமதுடையவர், வியன்நகரது சொலில் விளமரே
(5)
பண்டலை மழலை செயாழ்என மொழியுமை பாகமாக்
கொண்டலை குரைகழல் அடிதொழும் அவர்வினை குறுகிலர்
விண்டலை அமரர்கள் துதிசெய அருள்புரி விறலினர்
வெண்தலை பலிகொளும் விமலர்தம் வளநகர் விளமரே
(6)
மனைகள்தோறும் இடுபலி அதுகொள்வர், மதிபொதி சடையினர்
கனைகடல் அடுவிடம் அமுதுசெய் கறையணி மிடறினர்
முனைகெட வருமதில் எரிசெய்த அவர்கழல் பரவுவார்
வினைகெட அருள்புரி தொழிலினர், செழுநகர் விளமரே
(7)
நெறிகமழ் தருமுரை உணர்வினர், புணர்வுறு மடவரல்
செறிகமழ் தருமுரு உடையவர், படைபல பயில்பவர்
பொறிகமழ் தருபட அரவினர், விரவிய சடைமிசை
வெறிகமழ் தருமலர் அடைபவர் இடமெனில் விளமரே
(8)
தெண்கடல் புடையணி நெடுமதில் இலங்கையர் தலைவனைப்
பண்பட வரைதனில் அடர்செய்த பைங்கழல் வடிவினர்
திண்கடல் அடைபுனல் திகழ்சடை புகுவதொர் சேர்வினார்
விண்கடல் விடமலி அடிகள்தம் வளநகர் விளமரே
(9)
தொண்டசை உறவரு துயருறு காலனை மாள்வுற
அண்டல் செய்திருவரை வெருவுற ஆரழல் ஆயினார்
கொண்டல்செய் தருதிரு மிடறினர், இடமெனில் அளியினம்
விண்டிசை உறுமலர் நறுமது விரிபொழில் விளமரே
(10)
ஒள்ளியர் தொழுதெழ உலகினில் உரைசெயும் மொழிபல
கொள்ளிய களவினர் குண்டிகை அவர்தவம் அறிகிலார்
பள்ளியை மெய்யெனக் கருதன்மின், பரிவொடு பேணுவீர்
வெள்ளிய பிறையணி சடையினர் வளநகர் விளமரே
(11)
வெந்தவெண் பொடியணி அடிகளை விளமருள் விகிர்தரைச்
சிந்தையுள் இடைபெற உரைசெய்த தமிழிவை செழுவிய
அந்தணர் புகலியுள் அழகமர் அருமறை !ஞானசம்
பந்தன மொழியிவை உரைசெயும் அவர்வினை பறையுமே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page