திருமருகல் – சம்பந்தர் தேவாரம் (1):

<– திருமருகல்

(1)
சடையா எனுமால் சரண்நீ எனுமால்
விடையா எனுமால் வெருவா விழுமால்
மடையார் குவளை மலரும் மருகல்
உடையாய் தகுமோ இவள்உள் மெலிவே
(2)
சிந்தா எனுமால் சிவனே எனுமால்
முந்தா எனுமால் முதல்வா எனுமால்
கொந்தார் குவளை குலவும் மருகல்
எந்தாய் தகுமோ இவள் ஏசறவே
(3)
அறையார் கழலும் அழல்வாய் அரவும்
பிறையார் சடையும் உடையாய், பெரிய
மறையார் மருகல் மகிழ்வாய், இவளை
இறையார் வளை கொண்டு எழில் வவ்வினையே
(4)
ஒலிநீர் சடையில் கரந்தாய் உலகம்
பலிநீ திரிவாய் பழியில் புகழாய்
மலிநீர் மருகல் மகிழ்வாய் இவளை
மெலி நீர்மையள் ஆக்கவும் வேண்டினையே
(5)
துணி நீல வண்ணம் முகில் தோன்றியன்ன
மணிநீலகண்டம் உடையாய், மருகல்
கணிநீல வண்டார் குழலாள் இவள்தன்
அணிநீல ஒண்கண் அயர்வாக்கினையே
(6)
பலரும் பரவப் படுவாய் சடைமேல்
மலரும் பிறையொன்றுடையாய் மருகல்
புலரும் தனையும் துயிலாள் புடைபோந்து
அலரும் படுமோ அடியாள் இவளே
(7)
வழுவாள் பெருமான் கழல் வாழ்கஎனா
எழுவாள் நினைவாள் இரவும் பகலும்
மழுவாள் உடையாய் மருகல்  பெருமான்
தொழுவாள் இவளைத் துயராக்கினையே
(8)
இலங்கைக்கிறைவன் விலங்கல் எடுப்பத்
துலங்கவ் விரலூன்றலும் தோன்றலனாய்
வலங்கொள் மதில்சூழ் மருகல் பெருமான்
அலங்கல் இவளை அலராக்கினையே
(9)
எரியார் சடையும் அடியும் இருவர்
தெரியாததொர் தீத் திரளாயவனே
மரியார் பிரியா மருகல் பெருமான்
அரியாள் இவளை அயர்வாக்கினையே
(10)
அறிவில் சமணும் அலர் சாக்கியரும்
நெறிஅல்லன செய்தனர் நின்றுழல்வார்
மறிஏந்து கையாய் மருகல் பெருமான்
நெறியார் குழலி நிறை நீக்கினையே
(11)
வயஞானம் வல்லார் மருகல் பெருமான்
உயர்ஞானம் உணர்ந்தடி உள்குதலால்
இயல்ஞான சம்பந்தன் பாடல் வல்லார்
வியன் ஞாலமெல்லாம் விளங்கும் புகழே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page