திருமறைக்காடு – அப்பர் தேவாரம் (3):

<– திருமறைக்காடு

(1)
பண்ணின் நேர் மொழியாள் உமை பங்கரோ
மண்ணினார் வலஞ்செய் மறைக்காடரோ
கண்ணினால் உமைக் காணக் கதவினைத்
திண்ணமாகத் திறந்தருள் செய்ம்மினே
(2)
ஈண்டு செஞ்சடை ஆகத்துள் ஈசரோ
மூண்ட கார்முகிலின் முறிக்கண்டரோ
ஆண்டு கொண்டநீரே அருள் செய்திடும்
நீண்ட மாக்கதவின் வலி நீக்குமே
(3)
அட்ட மூர்த்தியதாகிய அப்பரோ
துட்டர் வான்புரம் சுட்ட சுவண்டரோ
பட்டம் கட்டிய சென்னிப் பரமரோ
சட்ட இக்கதவம் திறப்பிம்மினே
(4)
அரிய நான்மறை ஓதிய நாவரோ
பெரிய வான்புரம் சுட்ட சுவண்டரோ
விரிகொள் கோவண ஆடை விருத்தரோ
பெரிய வான்கதவம் பிரிவிக்கவே
(5)
மலையில் நீடிருக்கும் மறைக்காடரோ
கலைகள் வந்திறைஞ்சும் கழலேத்தரோ
விலையில் மாமணி வண்ண உருவரோ
தொலைவிலாக் கதவம் துணை நீக்குமே
(6)
பூக்கும் தாழை புறணிஅருகெலாம்
ஆக்கும் தண்பொழில் சூழ் மறைக்காடரோ
ஆர்க்கும் காண்பரியீர் அடிகேள் உமை
நோக்கிக் காணக் கதவைத் திறவுமே
(7)
வெந்த வெண்பொடிப் பூசும் விகிர்தரோ
அந்தமில்லி அணி மறைக்காடரோ
எந்தை நீஅடியார் வந்திறைஞ்சிட
இந்த மாக்கதவம் பிணி நீக்குமே
(8)
ஆறு சூடும் அணி மறைக்காடரோ
கூறு மாதுமைக்கீந்த குழகரோ
ஏறதேறிய எம்பெருமான் இந்த
மாறிலாக் கதவம் வலி நீக்குமே
(9)
சுண்ண வெண்பொடிப் பூசும் சுவண்டரோ
பண்ணி ஏறுகந்தேறும் பரமரோ
அண்ணல் ஆதி அணி மறைக்காடரோ
திண்ணமாக் கதவம் திறப்பிம்மினே
(10)
விண்ணுளார் விரும்பி எதிர் கொள்ளவே
மண்ணுளார் வணங்கும் மறைக்காடரோ
கண்ணினால் உமைக் காணக் கதவினைத்
திண்ணமாகத் திறந்தருள் செய்ம்மினே
(11)
அரக்கனை விரலால் அடர்த்திட்டநீர்
இரக்கம் ஒன்றிலீர் எம்பெருமானிரே
சுரக்கும் புன்னைகள் சூழ் மறைக்காடரோ
சரக்க இக்கதவம் திறப்பிம்மினே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page