(1)
சதுரம் மறைதான் துதிசெய்து வணங்கும்
மதுரம் பொழில்சூழ் மறைக்காட்டுறை மைந்தா
இதுநன்கிறை வைத்தருள் செய்க, எனக்குன்
கதவம் திருக்காப்புக் கொள்ளும் கருத்தாலே
(2)
சங்கம் தரளம் அவைதான் கரைக்கெற்றும்
வங்கக் கடல்சூழ் மறைக்காட்டுறை மைந்தா
மங்கை உமை பாகமுமாக இதென்கொல்
கங்கை சடைமேல் அடைவித்த கருத்தே
(3)
குரவம் குருக்கத்திகள் புன்னைகள் ஞாழல்
மருவும் பொழில்சூழ் மறைக்காட்டுறை மைந்தா
சிரமும் மலரும் திகழ் செஞ்சடை தன்மேல்
அரவம் மதியோடு அடைவித்தல் அழகே
(4)
படர் செம்பவளத்தொடு பன்மலர் முத்தம்
மடலம் பொழில்சூழ் மறைக்காட்டுறை மைந்தா
உடலம் உமை பங்கமதாகியும் என் கொல்
கடல் நஞ்சமுதாவது உண்ட கருத்தே
(5)
வானோர் மறைமா தவத்தோர் வழிபட்ட
தேனார் பொழில்சூழ் மறைக்காட்டுறை செல்வா
ஏனோர் தொழுதேத்த இருந்த நீஎன்கொல்
கானார் கடு வேடுவனான கருத்தே
(6)
பலகாலங்கள் வேதங்கள் பாதங்கள் போற்றி
மலரால் வழிபாடு செய் மாமறைக்காடா
உலகேழுடையாய் கடைதோறுமுன் என்கொல்
தலைசேர் பலிகொண்டதில் உண்டது தானே
(7)
வேலா வலயத்தயலே மிளிர்வெய்தும்
சேலார் திருமா மறைக்காட்டுறை செல்வா
மாலோடு அயன்இந்திரன் அஞ்ச முனென்கொல்
காலார் சிலைக் காமனைக் காய்ந்த கருத்தே
(8)
கலங்கொள் கடலோதம் உலாவு கரைமேல்
வலங்கொள்பவர் வாழ்த்திசைக்கும் மறைக்காடா
இலங்கை உடையான் அடர்ப்பட்டிடரெய்த
அலங்கல் விரலூன்றி அருள் செய்தவாறே
(9)
கோனென்று பல்கோடி உருத்திரர் போற்றும்
தேனம் பொழில்சூழ் மறைக்காட்டுறை செல்வா
ஏனம் கழுகானவர் உன்னை முனென்கொல்
வானம் தல மண்டியும் கண்டிலாவாறே
(10)
வேதம் பலஓமம் வியந்துஅடி போற்ற
ஓதம் உலவும் மறைக்காட்டில் உறைவாய்
ஏதில் சமண் சாக்கியர் வாக்கிவை என்கொல்
ஆதரொடு தாம் அலர் தூற்றியவாறே
(11)
காழிந் நகரான் கலைஞான சம்பந்தன்
வாழிம் மறைக்காடனை வாய்ந்தறிவித்த
ஏழினிசை மாலை ஈரைந்து இவை வல்லார்
வாழி உலகோர்தொழ வான்அடைவாரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...