(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)
(சம்பந்தர் தேவாரம்):
(1)
வாரார் கொங்கை மாதோர் பாகமாக, வார்சடை
நீரார் கங்கை திங்கள்சூடி, நெற்றி ஒற்றைக்கண்
கூரார் மழுவொன்றேந்தி, அந்தண் குழகன் குடமூக்கில்
காரார் கண்டத்தெண்தோள் எந்தை காரோணத்தாரே
(2)
முடியார் மன்னர், மடமான் விழியார், மூவுலகும் ஏத்தும்
படியார் பவள வாயார் பலரும் பரவிப் பணிந்தேத்தக்
கொடியார் விடையார், மாடவீதிக் குடந்தைக் குழகாரும்
கடியார் சோலைக் கலவ மயிலார் காரோணத்தாரே
(3)
மலையார் மங்கை பங்கர், அங்கை அனலர், மடலாரும்
குலையார் தெங்கு குளிர்கொள் வாழை அழகார் குடமூக்கில்
முலையார், அணிபொன் முளை வெண்ணகையார், மூவா மதியினார்
கலையார் மொழியார் காதல்செய்யும் காரோணத்தாரே
(4)
போதார் புனல்சேர் கந்தமுந்திப் பொலிய அழகாரும்
தாதார்பொழில் சூழ்ந்தெழிலார் புறவில் அந்தண் குடமூக்கில்
மாதார்மங்கை பாகமாக மனைகள் பலிதேர்வார்
காதார் குழையர், காளகண்டர், காரோணத்தாரே
(5)
பூவார் பொய்கையலர் தாமரை செங்கழுநீர் புறவெல்லாம்
தேவார் சிந்தை அந்தணாளர் சீரார்அடி போற்றக்
கூவார் குயில்கள்ஆலும், மயில்களின் சொல், கிளிப்பிள்ளை
காவார் பொழில் சூழ்ந்தழகார் குடந்தைக் காரோணத்தாரே
(6)
மூப்பூர் நலிய நெதியார் விதியாய், முன்னே அனல்வாளி
கோப்பார், பார்த்தன் நிலைகண்டருளும் குழகர், குடமூக்கில்
தீர்ப்பார் உடலில் அடுநோய் அவலம் வினைகள் நலியாமைக்
காப்பார் காலன் அடையா வண்ணம் காரோணத்தாரே
(7)
ஊனார் தலைகை ஏந்தி உலகம் பலிதேர்ந்துழல் வாழ்க்கை
மானார் தோலார், புலியின் உடையார், கரியின் உரிபோர்வை
தேனார் மொழியார் திளைத்தங்காடித் திகழும் குடமூக்கில்
கானார் நட்டமுடையார் செல்வக் காரோணத்தாரே
(8)
வரையார் திரதோள் மதவாள் அரக்கன் எடுப்ப, மலைசேரும்
விரையார் பாத நுதியால் ஊன்ற, நெரிந்து சிரம்பத்தும்
உரையார் கீதம் பாடக் கேட்டங்கொளிவாள் கொடுத்தாரும்
கரையார் பொன்னி சூழ்தண் குடந்தைக் காரோணத்தாரே
(9)
கரியமாலும், செய்ய பூமேல் அயனும் கழறிப்போய்
அரிய அண்டம் தேடிப்புக்கும் அளக்க ஒண்கிலார்
தெரியஅரிய தேவர், செல்வம் திகழும் குடமூக்கில்
கரியகண்டர் காலகாலர் காரோணத்தாரே
(10)
நாணார் அமணர், நல்லதறியார், நாளும் குரத்திகள்
பேணார் தூய்மை, மாசு கழியார், பேசேல் அவரோடும்
சேணார் மதிதோய் மாடமல்கு செல்வ நெடுவீதிக்
கோணாகரம் ஒன்றுடையார் குடந்தைக் காரோணத்தாரே
(11)
கருவார் பொழில் சூழ்ந்தழகார் செல்வக் காரோணத்தாரைத்
திருவார் செல்வ மல்கு சண்பைத் திகழும் சம்பந்தன்
உருவார் செஞ்சொல் மாலை இவைபத்துரைப்பார் உலகத்துக்
கருவார் இடும்பைப் பிறப்பதறுத்துக் கவலை கழிவாரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...