திருவீழிமிழலை – சம்பந்தர் தேவாரம் (2):

<– திருவீழிமிழலை

(1)
சடையார் புனல் உடையான், ஒரு சரிகோவணம் உடையான்
படையார் மழுவுடையான், பல பூதப்படை உடையான்
மடமான்விழி உமைமாது இடம்உடையான், எனை உடையான்
விடையார் கொடியுடையான் இடம் வீழிம்மிழலையே
(2)
ஈறாய் முதலொன்றாய், இரு பெண்ஆண், குணமூன்றாய்
மாறா மறைநான்காய், வருபூதம் அவை ஐந்தாய்
ஆறார் சுவை, ஏழோசையொடு, எட்டுத்திசை தானாய்
வேறாய் உடனானான் இடம் வீழிம்மிழலையே
(3)
வம்மின் அடியீர் நாண்மலரிட்டுத் தொழுதுய்ய
உம்அன்பினொடு எம்அன்பு செய்தீசன் உறை கோயில்
மும்மென்றிசை முரல்வண்டுகள் கெண்டித் திசையெங்கும்
விம்மும் பொழில்சூழ் தண்வயல் வீழிம்மிழலையே
(4)
பண்ணும் பதமேழும், பல ஓசைத் தமிழவையும்
உள்நின்றதொர் சுவையும், உறு தாளத்தொலி பலவும்
மண்ணும் புனலும், உயிரும், வரு காற்றும், சுடர் மூன்றும்
விண்ணும் முழுதானான் இடம் வீழிம்மிழலையே
(5)
ஆயாதன சமயம்பல அறியாதவன், நெறியின்
தாயானவன், உயிர்கட்குமுன் தலையானவன், மறைமுத்
தீயானவன், சிவனெம்இறை, செல்வத் திருவாரூர்
மேயானவன், உறையும்இடம் வீழிம்மிழலையே
(6)
கல்லால்நிழல் கீழாய் இடர்காவாய் என வானோர்
எல்லாமொரு தேராய், அயன் மறைபூட்டி நின்றுய்ப்ப
வல்வாய்எரி காற்றீர்க்கு அரி கோல், வாசுகி நாண்கல்
வில்லால் எயிலெய்தான் இடம் வீழிம்மிழலையே
(7)
கரத்தான்மலி சிரத்தான், கரிஉரித்தாயதொர் படத்தான்
புரத்தார் பொடிபடத் தன் அடிபணி மூவர்கட்கு ஓவா
வரத்தான் மிகஅளித்தான் இடம், வளர்புன்னை முத்தரும்பி
விரைத்தாது பொன்மணி ஈன்றணி வீழிம்மிழலையே
(8)
முன்னிற்பவர் இல்லா முரணரக்கன் வடகயிலை
தன்னைப் பிடித்தெடுத்தான் முடி தடந்தோளிற ஊன்றிப்
பின்னைப் பணிந்தேத்தப் பெருவாள் பேரொடும் கொடுத்த
மின்னிற்பொலி சடையான்இடம் வீழிம்மிழலையே
(9)
பண்டேழு உலகுண்டான், அவை கண்டானும் முன்னறியா
ஒண்தீயுருவானான் உறை கோயில், நிறை பொய்கை
வண்தாமரை மலர்மேல் மடஅன்னம் நடைபயில
வெண்தாமரை செந்தாதுதிர் வீழிம்மிழலையே
(10)
மசங்கல் சமண், மண்டைக் கையர், குண்டக் குணமிலிகள்
இசங்கும் பிறப்பறுத்தான் இடம், இருந்தேன் களித்திரைத்துப்
பசும்பொற்கிளி களிமஞ்ஞைகள் ஒளிகொண்டெழு பகலோன்
விசும்பைப் பொலிவிக்கும் பொழில் வீழிம்மிழலையே
(11)
வீழிம்மிழலை மேவிய விகிர்தன் தனை, விரைசேர்
காழிந்நகர் கலைஞான சம்பந்தன் தமிழ்பத்தும்
யாழின்னிசை வல்லார் சொலக்கேட்டார் அவரெல்லாம்
ஊழின்மலி வினைபோயிட உயர்வான் அடைவாரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page