(1)
மட்டொளி விரிதரு மலர்நிறை சுரிகுழல் மடவரல்
பட்டொளி மணியல்குல் உமைஅமை உருவொரு பாகமாக்
கட்டொளிர் புனலொடு கடியரவுடனுறை முடிமிசை
விட்டொளி உதிர்பிதிர் மதியவர் பதி விழிமிழலையே
(2)
எண்ணிற வரிவளை நெறிகுழல் எழில்மொழி இளமுலைப்
பெண்ணுறும் உடலினர், பெருகிய கடல்விட மிடறினர்
கண்ணுறு நுதலினர், கடியதொர் விடையினர், கனலினர்
விண்ணுறு பிறையணி சடையினர், பதி விழிமிழலையே
(3)
மைத்தகும் அதர்விழி மலைமகள் உருவொரு பாகமா
வைத்தவர், மதகரி உரிவை செய்தவர், தமை மருவினார்
தெத்தென விசைமுரல் சரிதையர், திகழ்தரும் அரவினர்
வித்தக நகுதலை உடையவர் இடம் விழிமிழலையே
(4)
செவ்வழல் எனநனி பெருகிய உருவினர், செறிதரு
கவ்வழல் அரவினர், கதிர்முதிர் மழுவினர், தொழுவிலா
முவ்வழல் நிசிசரர் விறலவை அழிதர முதுமதிள்
வெவ்வழல் கொளநனி முனிபவர் பதி விழிமிழலையே
(5)
பைங்கணதொரு பெருமழலை வெள்ஏற்றினர், பலியெனா
எங்கணும் உழிதர்வர், இமையவர் தொழுதெழும் இயல்பினர்
அங்கணர், அமரர்கள் அடியிணை தொழுதெழ, வாரமா
வெங்கண அரவினர், உறைதரு பதி விழிமிழலையே
(6)
பொன்னன புரிதரு சடையினர், பொடியணி வடிவினர்
உன்னினர் வினையவை களைதலை மருவிய ஒருவனார்
தென்னென இசைமுரல் சரிதையர், திகழ்தரு மார்பினில்
மின்னென மிளிர்வதொர் அரவினர், பதி விழிமிழலையே
(7)
அக்கினொடரவரை அணிதிகழ் ஒளியதொர் ஆமைபூண்டு
இக்குக மலிதலை கலனென விடுபலி ஏகுவர்
கொக்கரை குழல்முழ விழவொடும் இசைவதொர் சரிதையர்
மிக்கவர் உறைவது விரைகமழ் பொழில் விழிமிழலையே
(8)
பாதமொர் விரலுற மலையடர் பலதலை நெரிதரப்
பூதமொடடியவர் புனைகழல் தொழுதெழு புகழினர்
ஓதமொடொலி திரை படுகடல் விடமுடை மிடறினர்
வேதமொடுறுதொழில் மதியவர் பதி விழிமிழலையே
(9)
நீரணி மலர்மிசை உறைபவன், நிறைகடல் உறுதுயில்
நாரணன் எனஇவர் இருவரும் நறுமலர் அடிமுடி
ஓர்உணர்வினர் செலலுறல் அரும்உருவினொடு ஒளிதிகழ்
வீரணர், உறைவது வெறிகமழ் பொழில் விழிமிழலையே
(10)
இச்சையர், இனிதென இடுபலி படுதலை மகிழ்வதோர்
பிச்சையர், பெருமையை இறை பொழுதறிவென உணர்விலர்
மொச்சைய அமணரும் உடைபடு துகிலரும் அழிவதோர்
விச்சையர் உறைவது விரைகமழ் பொழில் விழிமிழலையே
(11)
உன்னிய வருமறை ஒலியினை முறைமிகு பாடல்செய்
இன்னிசை அவருறை எழில்திகழ் பொழில் விழிமிழலையை
மன்னிய புகலியுண் ஞானசம்பந்தன் வண்தமிழ்
சொன்னவர் துயரிலர் வியனுலகு உறுகதி பெறுவரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...