ஆவூர்ப்பசுபதீச்சரம்:

<– சோழ நாடு (காவிரி தென்கரை)

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சம்பந்தர் தேவாரம்):

(1)
புண்ணியர், பூதியர், பூதநாதர், புடைபடுவார் தம் மனத்தார், திங்கள்
கண்ணியர் என்றென்று காதலாளர் கை தொழுதேத்த இருந்த ஊராம்
விண்ணுயர் மாளிகை மாடவீதி விரைகமழ் சோலை சுலாவியெங்கும்
பண்ணியல் பாடலறாத ஆவூர்ப் பசுபதியீச்சரம் பாடு நாவே
(2)
முத்தியர், மூப்பிலர், ஆப்பினுள்ளார், முக்கணர், தக்கன்தன் வேள்விசாடும்
அத்தியர் என்றென்று அடியர்ஏத்தும் ஐயன் அணங்கொடுஇருந்த ஊராம்
தொத்தியலும் பொழில் மாடுவண்டு துதைந்தெங்கும் தூமதுப் பாயக், கோயில்
பத்திமைப் பாடலறாத ஆவூர்ப் பசுபதியீச்சரம் பாடு நாவே
(3)
பொங்கி வரும்புனல் சென்னிவைத்தார், போம்வழி வந்திழி ஏற்றமானார்
இங்குயர் ஞானத்தர் வானோர்ஏத்தும் இறையவர்என்றும் இருந்த ஊராம்
தெங்குயர் சோலைசேர் ஆலை சாலி திளைக்கும் விளைவயல் சேரும்பொய்கைப்
பங்கய மங்கை விரும்பும் ஆவூர்ப் பசுபதியீச்சரம் பாடு நாவே
(4)
தேவியொர் கூறினர், ஏறதேறும் செலவினர், நல்குரவு என்னை நீக்கும்
ஆவியர், அந்தணர் அல்லல் தீர்க்கும் அப்பனார் அங்கே அமர்ந்த ஊராம்
பூவியலும் பொழில் வாசம்வீசப் புரிகுழலார் சுவடொற்றி முற்றப்
பாவியல் பாடலறாத ஆவூர்ப் பசுபதியீச்சரம் பாடு நாவே
(5)
இந்தணையும் சடையார், விடையார், இப்பிறப்பென்னை அறுக்க வல்லார்
வந்தணைந்தின்னிசை பாடுவார் பால் மன்னினர் மன்னியிருந்த ஊராம்
கொந்தணையும் குழலார் விழவில் கூட்டம் இடையிடை சேரும்வீதிப்
பந்தணையும் விரலார்தம் ஆவூர்ப் பசுபதியீச்சரம் பாடு நாவே
(6)
குற்றமறுத்தார், குணத்தினுள்ளார், கும்பிடுவார் தமக்கன்பு செய்வார்
ஒற்றை விடையினர், நெற்றிக் கண்ணார் உறைபதியாகும், செறிகொள் மாடம்
சுற்றிய வாசலின் மாதர்விழாச் சொற்கவிபாட நிதான நல்கப்
பற்றிய கையினர் வாழும் ஆவூர்ப் பசுபதியீச்சரம் பாடு நாவே
(7)
நீறுடையார், நெடுமால் வணங்கு நிமிர் சடையார், நினைவார் தம்உள்ளம்
கூறுடையார், உடை கோவணத்தார், குவலயம் ஏத்த இருந்த ஊராம்
தாறுடை வாழையில் கூழைமந்தி தகு கனிஉண்டு மிண்டிட்டு இனத்தைப்
பாறிடப் பாய்ந்து பயிலும் ஆவூர்ப் பசுபதியீச்சரம் பாடு நாவே
(8)c
வெண்தலை மாலை விரவிப்பூண்ட மெய்யுடையார், விறலார் அரக்கன்
வண்டமர் பூமுடி செற்றுகந்த மைந்தர் இடம், வளமோங்கி எங்கும்
கண்டவர் சிந்தைக் கருத்தின் மிக்கார் கதியருள் என்று கையாரக் கூப்பிப்
பண்டலர் கொண்டு பயிலும் ஆவூர்ப் பசுபதியீச்சரம் பாடு நாவே
(9)
மாலும் அயனும் வணங்கி நேட, மற்றுஅவருக்கு எரியாகிநீண்ட
சீலம் அறிவரிதாகி நின்ற செம்மையினார் அவர் சேரும்ஊராம்
கோல விழாவின் அரங்கதேறிக் கொடியிடை மாதர்கள் மைந்தரோடும்
பாலெனவே மொழிந்தேத்தும் ஆவூர்ப் பசுபதியீச்சரம் பாடு நாவே
(10)
பின்னிய தாழ்சடையார் பிதற்றும் பேதையராம் சமண் சாக்கியர்கள்
தன்னியலும் உரை கொள்ளகில்லாச் சைவர் இடம், தளவேறு சோலைத்
துன்னிய மாதரும் மைந்தர் தாமும் சுனையிடை மூழ்கித் தொடர்ந்த சிந்தைப்
பன்னிய பாடல் பயிலும் ஆவூர்ப் பசுபதியீச்சரம் பாடு நாவே
(11)
எண்திசையாரும் வணங்கியேத்தும் எம்பெருமானை, எழில்கொள் ஆவூர்ப்
பண்டுரியார் சிலர் தொண்டர் போற்றும் பசுபதியீச்சரத்து ஆதி தன் மேல்
கண்டல்கள் மிண்டிய கானல்காழிக் கவுணியன் ஞானசம்பந்தன் சொன்ன
கொண்டு இனிதாஇசை பாடியாடிக் கூடுமவர் உடையார்கள் வானே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page