தென்குடித்திட்டை:

<– சோழ நாடு (காவிரி தென்கரை)

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சம்பந்தர் தேவாரம்):

(1)
முன்னைநான் மறையவை முறைமுறை குறையொடும்
தன்னதாள் தொழுதெழ நின்றவன் தன்னிடம்
மன்னுமா காவிரி வந்தடி வருடநல்
செந்நெலார் வளவயல் தென்குடித் திட்டையே
(2)
மகரமாடும் கொடி மன்மத வேள்தனை
நிகரலாகா நெருப்பெழ விழித்தான் இடம்
பகரவாள் நித்திலம் பன் மகரத்தொடும்
சிகர மாளிகை தொகும் தென்குடித் திட்டையே
(3)
கருவினால் அன்றியே கருவெலாம் ஆயவன்
உருவினால் அன்றியே உருவுசெய்தான் இடம்
பருவநாள் விழவொடும் பாடலோடு ஆடலும்
திருவினான் மிகுபுகழ்த் தென்குடித் திட்டையே
(4)
உண்ணிலா ஆவியாய் ஓங்குதன் தன்மையை
விண்ணிலார் அறிகிலா வேத வேதாந்தன் ஊர்
எண்ணிலார் எழில்மணிக் கனக மாளிகை இளம்
தெண்ணிலா விரிதரும் தென்குடித் திட்டையே
(5)
வருந்தி வானோர்கள் வந்தடைய, மாநஞ்சு தான்
அருந்தி, ஆரமுதவர்க்கருள் செய்தான் அமரும்ஊர்
செருந்திபூ மாதவிப் பந்தர்வண் செண்பகம்
திருந்துநீள் வளர்பொழில் தென்குடித் திட்டையே
(6)
ஊறினார், ஓசையுள் ஒன்றினார், ஒன்றிமால்
கூறினார், அமர்தரும் குமரவேள் தாதையூர்
ஆறினார், பொய்யகத்தை உணர்வெய்தி மெய்
தேறினார் வழிபடும் தென்குடித் திட்டையே
(7)
கானலைக்கும் அவன் கண்இடந்து அப்பநீள்
வானலைக்கும் தவத்தேவு வைத்தான் இடம்
தானலைத் தெள்ளமூர் தாமரைத் தண்டுறை
தேனலைக்கும் வயல் தென்குடித் திட்டையே
(8)
மாலொடும் பொருதிறல் வாளரக்கன் நெரிந்து
ஓலிடும் படி விரலொன்று வைத்தான் இடம்
காலொடும் கனக மூக்குடன் வரக் கயல்வரால்
சேலொடும் பாய்வயல் தென்குடித் திட்டையே
(9)
நாரணன் தன்னொடு நான்முகன் தானுமாய்க்
காரணன் அடிமுடி காணஒண்ணான் இடம்
ஆரணம் கொண்டு பூசுரர்கள் வந்தடி தொழச்
சீரணங்கும் புகழ்த் தென்குடித் திட்டையே
(10)
குண்டிகைக் கையுடைக் குண்டரும் புத்தரும்
பண்டுரைத்தே இடும் பற்றுவிட்டீர் தொழும்
வண்டிரைக்கும் பொழில் தண்டலைக் கொண்டலார்
தெண்திரைத் தண்புனல் தென்குடித் திட்டையே
(11)
தேனலார் சோலைசூழ் தென்குடித் திட்டையைக்
கானலார் கடிபொழில் சூழ்தரும் காழியுள்
ஞானமார் ஞானசம்பந்தன் செந்தமிழ்
பானலார் மொழிவலார்க்கில்லையாம் பாவமே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page