(1)
மஞ்சனே மணியும் ஆனாய், மரகதத் திரளுமானாய்
நெஞ்சுளே புகுந்து நின்று நினைதரு நிகழ்வினானே
துஞ்சும் போதாக வந்து துணை எனக்காகி நின்று
அஞ்சல் என்றருள வேண்டும் ஆவடுதுறையுளானே
(2)
நான்உகந்துன்னை நாளும் நணுகுமா கருதியேயும்
ஊனுகந்தோம்பு நாயேன், உள்ளுற ஐவர் நின்றார்
தானுகந்தே உகந்த தகவிலாத் தொண்டனேனான்
ஆனுகந்தேறுவானே ஆவடுதுறையுளானே
(3)
கட்டமே வினைகளான காத்திவை நோக்கி ஆளாய்
ஒட்டவே ஒட்டி நாளும் உன்னையுள் வைக்க மாட்டேன்
பட்டவான் தலைகை ஏந்திப் பலிதிரிந்தூர்கள் தோறும்
அட்டமா உருவினானே ஆவடுதுறையுளானே
(4)
பெருமை நன்றுடைய தில்லை என்றுநான் பேச மாட்டேன்
ஒருமையால் உன்னை உள்கி உகந்து வானேற மாட்டேன்
கருமையிட்டாய ஊனைக் கட்டமே கழிக்கின்றேனான்
அருமையா நஞ்சம் உண்ட ஆவடுதுறையுளானே
(5)
துட்டனாய் வினையதென்னும் சுழித்தலை அகப்பட்டேனைக்
கட்டனா ஐவர் வந்து கலக்காமைக் காத்துக் கொள்வாய்
மட்டவிழ் கோதை தன்னை மகிழ்ந்தொரு பாகம் வைத்து
அட்டமா நாகமாட்டும் ஆவடுதுறையுளானே
(6)
காரழல் கண்ட மேயாய், கடிமதில் புரங்கள் மூன்றும்
ஓரழல் அம்பினாலே உகைத்துத்தீ எரிய மூட்டி
நீரழல் சடையுளானே, நினைப்பவர் வினைகள் தீர்ப்பாய்
ஆரழல் ஏந்தியாடும் ஆவடுதுறையுளானே
(7)
செறிவிலேன் சிந்தையுள்ளே சிவனடி தெரிய மாட்டேன்
குறியிலேன் குணமொன்றில்லேன், கூறுமா கூற மாட்டேன்
நெறிபடு மதியொன்றில்லேன், நினையுமா நினைய மாட்டேன்
அறிவிலேன் அயர்த்துப் போனேன் ஆவடுதுறையுளானே
(8)
கோலமா மங்கை தன்னைக் கொண்டொரு கோலமாய
சீலமே அறிய மாட்டேன், செய்வினை மூடி நின்று
ஞாலமாம் இதனுள் என்னை நைவியா வண்ணம் நல்காய்
ஆலமா நஞ்சமுண்ட ஆவடுதுறையுளானே
(9)
நெடியவன் மலரினானும் நேர்ந்திருபாலும் நேடக்
கடியதோர் உருவமாகிக் கனலெரியாகி நின்ற
வடிவின வண்ணமென்றே என்றுதாம் பேசலாகார்
அடியனேன் அஞ்சினுள்ளார் ஆவடுதுறையுளானே
(10)
மலைக்கு நேராய் அரக்கன் சென்றுற மங்கை அஞ்சத்
தலைக்குமேல் கைகளாலே தாங்கினான் வலியை மாள
உலப்பிலா விரலால் ஊன்றி ஒறுத்தவற்கருள்கள் செய்து
அலைத்த வான்கங்கை சூடும் ஆவடுதுறையுளானே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...