(1)
மின்னுமா மேகங்கள் பொழிந்திழிந்து அருவி
வெடிபடக் கரையொடும் திரை கொணர்ந்தெற்றும்
அன்னமாம் காவிரி அகன்கரை உறைவார்
அடியிணை தொழுதெழும் அன்பராம் அடியார்
சொன்னவாறறிவார் துருத்தியார், வேள்விக்
குடியுளார், அடிகளைச் செடியனேன் நாயேன்
என்னைநான் மறக்குமாறு எம்பெருமானை
என்உடம்பு அடும்பிணி இடர்கெடுத்தானை
(2)
கூடுமாறுள்ளன கூடியும் கோத்தும்
கொய்புன ஏனலோடு அடைவனம் சிதறி
மாடுமா கோங்கமே மருதமே பொருது
மலையெனக் குலைகளை மறிக்குமாறுந்தி
ஓடுமா காவிரித் துருத்தியார், வேள்விக்
குடியுளார், அடிகளைச் செடியனேன் நாயேன்
பாடுமாறறிகிலேன் எம்பெருமானைப்
பழவினை உள்ளன பற்றறுத்தானை
(3)
கொல்லுமால் யானையின் கொம்பொடு வம்பார்
கொழுங்கனிச் செழும்பயன் கொண்டு கூட்டெய்திப்
புல்கியும் தாழ்ந்தும் போந்து தவம் செய்யும்
போகரும் யோகரும் புலரிவாய் மூழ்கச்
செல்லுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
சொல்லுமாறு அறிகிலேன் எம்பெருமானைத்
தொடர்ந்தடும் கடும்பிணித் தொடர்வறுத்தானை
(4)
பொறியுமா சந்தனத் துண்டமோடகிலும்
பொழிந்திழிந்து அருவிகள் புன்புலம் கவரக்
கறியுமா மிளகொடு கதலியும் உந்திக்
கடலுற விளைப்பதே கருதித்தன் கைபோய்
எறியுமா காவிரித் துருத்தியார், வேள்விக்
குடியுளார், அடிகளைச் செடியனேன் நாயேன்
அறியுமாறு அறிகிலேன் எம்பெருமானை
அருவினை உள்ளன ஆசறுத்தானை
(5)
பொழிந்திழி மும்மதக் களிற்றின மருப்பும்
பொன்மலர் வேங்கையின் நன்மலர் உந்தி
இழிந்திழிந்தருவிகள் கடும்புனல் ஈண்டி
எண்திசையோர்களும் ஆட வந்திங்கே
சுழிந்திழி காவிரித் துருத்தியார், வேள்விக்
குடியுளார், அடிகளைச் செடியனேன் நாயேன்
ஒழிந்திலேன் பிதற்றுமாறு எம்பெருமானை
உற்றநோய் இற்றையே உறவொழித்தானை
(6)
புகழுமா சந்தனத் துண்டமோடு அகிலும்
பொன்மணி வரன்றியும் நன்மலர் உந்தி
அகழுமா அருங்கரை வளம்படப் பெருகி
ஆடுவார் பாவம்தீர்த்து அஞ்சனம் அலம்பித்
திகழுமா காவிரித் துருத்தியார், வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
இகழுமாறு அறிகிலேன் எம்பெருமானை
இழித்த நோய் இம்மையே ஒழிக்க வல்லானை
(7)
வரையின் மாங்கனியொடு, வாழையின் கனியும்
வருடியும் வணக்கியும் மராமரம் பொருதும்
கரையுமா கருங்கடல் காண்பதே கருத்தாய்க்
காம்பீலி சுமந்தொளிர் நித்திலம் கைபோய்
விரையுமா காவிரித் துருத்தியார், வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
உரையுமாறு அறிகிலேன் எம்பெருமானை
உலகறி பழவினை அறவொழித்தானை
(8)
ஊருமா தேசமே மனமுகந்துள்ளிப்
புள்ளினம் பலபடிந்து ஒண்கரை உகளக்
காருமா கருங்கடல் காண்பதே கருத்தாய்க்
கவரிமா மயிர்சுமந்து ஒண்பளிங்கிடறித்
தேருமா காவிரித் துருத்தியார், வேள்விக்
குடியுளார், அடிகளைச் செடியனேன் நாயேன்
ஆருமாறு அறிகிலேன் எம்பெருமானை
அம்மைநோய் இம்மையே ஆசறுத்தானை
(9)
புலங்களை வளம்படப் போக்கறப் பெருகிப்
பொன்களே சுமந்தெங்கும் பூசல் செய்தார்ப்ப
இலங்குமா முத்தினோடு இனமணி இடறி
இருகரைப் பெருமரம் பீழ்ந்து கொண்டெற்றிக்
கலங்குமா காவிரித் துருத்தியார், வேள்விக்
குடியுளார், அடிகளைச் செடியனேன் நாயேன்
விலங்குமாறு அறிகிலேன் எம்பெருமானை
மேலைநோய் இம்மையே வீடுவித்தானை
(10)
மங்கையோர் கூறுகந்து ஏறுகந்தேறி
மாறலார் திரிபுரம் நீறெழச் செற்ற
அங்கையான் கழலடியன்றி மற்றறியான்
அடியவர்க்கடியவன் தொழுவன் ஆரூரன்
கங்கையார் காவிரித் துருத்தியார், வேள்விக்
குடியுளார், அடிகளைச் சேர்த்திய பாடல்
தங்கையால் தொழுதுதம் நாவின்மேல் கொள்வார்
தவநெறி சென்றமர் உலகம் ஆள்பவரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...