தொழற்பாலதே எனும் திருக்குறுந்தொகை:
(1)
அண்டத்தானை, அமரர் தொழப்படும்
பண்டத்தானைப், பவித்திரமார் திரு
முண்டத்தானை, முற்றாத இளம்பிறைத்
துண்டத்தானைக் கண்டீர் தொழற்பாலதே
(2)
முத்தொப்பானை, முளைத்தெழு கற்பக
வித்தொப்பானை, விளக்கிடை நேரொளி
ஒத்தொப்பானை, ஒளிபவளத் திரள்
தொத்தொப்பானைக் கண்டீர் தொழற்பாலதே
(3)
பண்ணொத்தானைப், பவளம் திரண்டதோர்
வண்ணத்தானை, வகையுணர்வான் தனை
எண்ணத்தானை, இளம்பிறை போல் வெள்ளைச்
சுண்ணத்தானைக் கண்டீர் தொழற்பாலதே
(4)
விடலையானை, விரைகமழ் தேன்கொன்றைப்
படலையானைப், பலிதிரிவான் செலும்
நடலையானை, நரி பிரியாததோர்
சுடலையானைக் கண்டீர் தொழற்பாலதே
(5)
பரிதியானைப், பல்வேறு சமயங்கள்
கருதியானைக், கண்டார் மனம் மேவிய
பிரிதியானைப், பிறர் அறியாததோர்
சுருதியானைக் கண்டீர் தொழற்பாலதே
(6)
ஆதியானை, அமரர் தொழப்படும்
நீதியானை, நியம நெறிகளை
ஓதியானை, உணர்தற்கு அரியதோர்
சோதியானைக் கண்டீர் தொழற்பாலதே
(7)
ஞாலத்தானை, நல்லானை, வல்லார் தொழும்
கோலத்தானைக், குணப்பெருங்குன்றினை
மூலத்தானை, முதல்வனை, மூவிலைச்
சூலத்தானைக் கண்டீர் தொழற்பாலதே
(8)
ஆதிப்பால் அட்ட மூர்த்தியை, ஆனஞ்சும்
வேதிப்பானை, நம் மேல்வினை வெந்தறச்
சாதிப்பானைத், தவத்திடை மாற்றங்கள்
சோதிப்பானைக் கண்டீர் தொழற்பாலதே
(9)
நீற்றினானை, நிகரில் வெண் கோவணக்
கீற்றினானைக், கிளரொளிச் செஞ்சடை
ஆற்றினானை, அமரர்தம் ஆருயிர்
தோற்றினானைக் கண்டீர் தொழற்பாலதே
(10)
விட்டிட்டானை, மெய்ஞ் ஞானத்து மெய்ப்பொருள்
கட்டிட்டானைக், கனங்குழை பாலன்பு
பட்டிட்டானைப், பகைத்தவர் முப்புரம்
சுட்டிட்டானைக் கண்டீர் தொழற்பாலதே
(11)
முற்றினானை, இராவணன் நீள்முடி
ஒற்றினானை, ஒருவிரலால் உறப்
பற்றினானை, ஓர் வெண்தலைப் பாம்பரைச்
சுற்றினானைக் கண்டீர் தொழற்பாலதே