திருப்பூந்துருத்தி – அப்பர் தேவாரம் – 11 (பொது):

<– திருப்பூந்துருத்தி

மறக்கிற்பேனே எனும் திருக்குறுந்தொகை:

(1)
காசனைக் கனலைக் கதிர் மாமணித்
தேசனைப் புகழார் சிலர் தெண்ணர்கள்
மாசினைக் கழித்து ஆட்கொள வல்லஎம்
ஈசனை இனியான் மறக்கிற்பனே
(2)
புந்திக்கு விளக்காய புராணனைச்
சந்திக் கண் நடமாடும் சதுரனை
அந்தி வண்ணனை ஆரழல் மூர்த்தியை
வந்தென் உள்ளம் கொண்டானை மறப்பனே
(3)
ஈசன் ஈசன் என்றென்றும் அரற்றுவன்
ஈசன் தானென் மனத்தில் பிரிவிலன்
ஈசன் தன்னையும் என்மனத்துக் கொண்டு
ஈசன் தன்னையும் யான் மறக்கிற்பனே
(4)
ஈசன் என்னை அறிந்து அறிந்தனன்
ஈசன் சேவடி ஏற்றப் பெறுதலால்
ஈசன் சேவடி ஏத்தப் பெற்றேன்இனி
ஈசன் தன்னையும் யான் மறக்கிற்பனே
(5)
தேனைப் பாலினைத் திங்களை ஞாயிற்றை
வான வெண்மதி சூடிய மைந்தனை
வேனிலானை மெலிவுசெய் தீயழல்
ஞான மூர்த்தியை நான் மறக்கிற்பனே
(6)
கன்னலைக் கரும்பூறிய தேறலை
மின்னனை, மின்னனைய உருவனைப்
பொன்னனை, மணிக்குன்று பிறங்கிய
என்னனை இனியான் மறக்கிற்பனே
(7)
கரும்பினைக் கட்டியைக், கந்த மாமலர்ச்
சுரும்பினைச், சுடர்ச் சோதியுள் சோதியை
அரும்பினில் பெரும் போது கொண்டு ஆய்மலர்
விரும்பும் ஈசனை யான் மறக்கிற்பனே
(8)
துஞ்சும் போதும் சுடர்விடு சோதியை
நெஞ்சுள் நின்று நினைப்பிக்கு நீதியை
நஞ்சு கண்டத்தடக்கிய நம்பனை
வஞ்சனேன் இனி நான் மறக்கிற்பனே
(9)
புதிய பூவினை, புண்ணிய நாதனை
நிதியை நீதியை, நித்திலக் குன்றினைக்
கதியைக். கண்டங்கறுத்த கடவுளை
மதியை மைந்தனை நான் மறக்கிற்பனே
(10)
கருகு கார்முகில் போல்வதொர் கண்டனை
உருவ நோக்கியை, ஊழி முதல்வனைப்
பருகு பாலனைப், பால்மதி சூடியை
மருவு மைந்தனை நான் மறக்கிற்பனே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page