(குறிப்பு: அப்பர் சுவாமிகளால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)
(அப்பர் தேவாரம்):
(1)
சொல்மலிந்த மறைநான்கு ஆறங்கமாகிச்
சொற்பொருளும் கடந்த சுடர்ச்சோதி போலும்
கன்மலிந்த கயிலைமலை வாணர் போலும்
கடல்நஞ்சம் உண்டிருண்ட கண்டர் போலும்
மன்மலிந்த மணிவரைத் திண்தோளர் போலும்
மலையரையன் மடப்பாவை மணாளர் போலும்
கொல்மலிந்த மூவிலைவேல் குழகர் போலும்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெம் கூத்தனாரே
(2)
கானல் இளங்கலி மறவனாகிப் பார்த்தன்
கருத்தளவு செருத்தொகுதி கண்டார் போலும்
ஆனல்இளம் கடுவிடை ஒன்றேறி அண்டத்து
அப்பாலும் பலிதிரியும் அழகர் போலும்
தேனலிளம் துவலைமலி தென்றல் முன்றில்
செழும்பொழில் பூம்பாளைவிரி தேறல் நாறும்
கூனல்இளம் பிறைதடவு கொடிகொள் மாடக்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெம் கூத்தனாரே
(3)
நீறலைத்த திருவுருவும், நெற்றிக் கண்ணும்
நிலாஅலைத்த பாம்பினொடு நிறைநீர்க் கங்கை
ஆறலைத்த சடைமுடியும், அம்பொன் தோளும்
அடியவர்க்குக் காட்டியருள் புரிவார் போலும்
ஏறலைத்த நிமிர்கொடி ஒன்றுடையர் போலும்
ஏழுலகும் தொழுகழல்எம் ஈசர் போலும்
கூறலைத்த மலைமடந்தை கொழுநர் போலும்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெம் கூத்தனாரே
(4)
தக்கனது பெருவேள்வி தகர்த்தார் போலும்
சந்திரனைக் கலைகவர்ந்து தரித்தார் போலும்
செக்கரொளி பவளவொளி மின்னின் சோதி
செழுஞ்சுடர்த்தீ ஞாயிறெனச் செய்யர் போலும்
மிக்கதிறல் மறையவரால் விளங்கு வேள்வி
மிகுபுகைபோய் விண்பொழியக் கழனியெல்லாம்
கொக்கினிய கனிசிதறித் தேறல் பாயும்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெம் கூத்தனாரே
(5)
காலன்வலி தொலைத்த கழல் காலர் போலும்
காமனெழில் அழல்விழுங்கக் கண்டார் போலும்
ஆலதனில் அறம் நால்வர்க்களித்தார் போலும்
ஆணொடு பெண் அலிஅல்லர் ஆனார் போலும்
நீலஉரு வயிரநிரை பச்சை செம்பொன்
நெடும் பளிங்கென்றறிவரிய நிறத்தார் போலும்
கோலமணி கொழித்திழியும் பொன்னி நன்னீர்க்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெம் கூத்தனாரே
(6)
முடிகொண்ட வளர்மதியும் மூன்றாய்த் தோன்றும்
முளை ஞாயிறன்ன மலர்க் கண்கள் மூன்றும்
அடிகொண்ட சிலம்பொலியும் அருளார் சோதி
அணிமுறுவல் செவ்வாயும் அழகாய்த் தோன்றத்
துடிகொண்ட இடைமடவாள் பாகம் கொண்டு
சுடர்ச்சோதிக் கடிச்செம்பொன் மலைபோல் இந்நாள்
குடிகொண்டென் மனத்தகத்தே புகுந்தார் போலும்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெம் கூத்தனாரே
(7)
காரிலங்கு திருவுருவத்தவற்கும், மற்றைக்
கமலத்தில் காரணற்கும் காட்சி ஒண்ணாச்
சீரிலங்கு தழல்பிழம்பில் சிவந்தார் போலும்
சிலை வளைவித்தவுணர் புரம் சிதைத்தார் போலும்
பாரிலங்கு புனல்அனல்கால் பரமாகாசம்
பரிதிமதி சுருதியுமாய்ப் பரந்தார் போலும்
கூரிலங்கு வேற்குமரன் தாதை போலும்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெம் கூத்தனாரே
(8)
பூச்சூழ்ந்த பொழில்தழுவு புகலூர் உள்ளார்
புறம்பயத்தார், அறம்புரி பூந்துருத்தி புக்கு
மாச்சூழ்ந்த பழனத்தார், நெய்த்தானத்தார்
மாதவத்து வளர் சோற்றுத்துறையார், நல்ல
தீச்சூழ்ந்த திகிரி திருமாலுக்கீந்து
திருவானைக்காவில்ஓர் சிலந்திக்கந்நாள்
கோச்சோழர் குலத்தரசு கொடுத்தார் போலும்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெம் கூத்தனாரே
(9)
பொங்கரவர் புலித்தோலர் புராணர், மார்பில்
பொறிகிளர் வெண்பூணூல் புனிதர் போலும்
சங்கரவக் கடல்முகடு தட்டவிட்டுச்
சதுரநடம் ஆட்டுகந்த சைவர் போலும்
அங்கரவத் திருவடிக்கு ஆட்பிழைப்பத் தந்தை
அந்தணனை அற எறிந்தார்க்கருள் அப்போதே
கொங்கரவச் சடைக்கொன்றை கொடுத்தார் போலும்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெம் கூத்த னாரே.
(10)
ஏவியிடர்க் கடலிடைப்பட்டு இளைக்கின்றேனை
இப்பிறவி அறுத்தேற வாங்கியாங்கே
கூவிஅமர் உலகனைத்தும் உருவிப் போகக்
குறியில்அறு குணத்தாண்டு கொண்டார் போலும்
தாவிமுதல் காவிரிநல் யமுனை கங்கை
சரசுவதி பொற்றாமரை புட்கரணி தெண்ணீர்க்
கோவியொடு குமரிவரு தீர்த்தம் சூழ்ந்த
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெம் கூத்தனாரே
(11)
செறிகொண்ட சிந்தைதனுள் தெளிந்து தேறித்
தித்திக்கும் சிவ புவனத்தமுதம் போலும்
நெறிகொண்ட குழலியுமை பாகமாக
நிறைந்தமரர் கணம்வணங்க நின்றார் போலும்
மறிகொண்ட கரதலத்தெம் மைந்தர் போலும்
மதில்இலங்கைக் கோன்மலங்க வரைக்கீழிட்டுக்
குறிகொண்ட இன்னிசை கேட்டுகந்தார் போலும்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெம் கூத்தனாரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...