திருநள்ளாறு – அப்பர் தேவாரம் (1):

<– திருநள்ளாறு

(1)
உள்ளாறாததோர் புண்டரிகத் திரள்
தெள்ளாறாச் சிவ சோதித் திரளினைக்
கள்ளாறாத பொற்கொன்றை கமழ்சடை
நள்ளாறா என நம்வினை நாசமே
(2)
ஆரணப் பொருளாம் அருளாளனார்
வாரணத்துரி போர்த்த மணாளனார்
நாரணன் நண்ணியேத்து நள்ளாறனார்
காரணக்கலை ஞானக் கடவுளே
(3)
மேகம் பூண்டதோர் மேருவில் கொண்டெயில்
சோகம் பூண்டழல் சோரத் தொட்டான் அவன்
பாகம் பூண்டமால் பங்கயத்தானொடு
நாகம் பூண்டு கூத்தாடு நள்ளாறனே
(4)
மலியும் செஞ்சடை வாளரவம்மொடு
பொலியும் பூம்புனல் வைத்த புனிதனார்
நலியும் கூற்றை நலிந்த நள்ளாறர்தம்
வலியும் கண்டு இறுமாந்து மகிழ்வனே
(5)
உறவனாய் நிறைந்துள்ளம் குளிர்ப்பவன்
இறைவனாகி நின்று எண் நிறைந்தானவன்
நறவ நாறும் பொழில் திருநள்ளாறன்
மறவனாய்ப் பன்றிப் பின் சென்ற மாயமே
(6)
செக்கர் அங்கழி செஞ்சுடர்ச் சோதியார்
நக்கர் அங்கரவார்த்த நள்ளாறனார்
வக்கரன் உயிர் வவ்விய மாயற்குச்
சக்கரம் அருள் செய்த சதுரரே
(7)
வஞ்ச நஞ்சில் பொலிகின்ற கண்டத்தர்
விஞ்சையில் செல்வப் பாவைக்கு வேந்தனார்
வஞ்ச நெஞ்சத்தவர்க்கு வழிகொடார்
நஞ்ச நெஞ்சர்க்கருளும் நள்ளாறரே
(8)
அல்லன் என்றும் அலர்க்கு, அருளாயின
சொல்லன் என்று சொல்லா மறைச்சோதியான்
வல்லனென்றும் வல்லார் வளம் மிக்கவர்
நல்லன் என்றும் நல்லார்க்கு நள்ளாறனே
(9)
பாம்பணைப் பள்ளி கொண்ட பரமனும்
பூம்பணைப் பொலிகின்ற புராணனும்
தாம் பணிந்து அளப்பொண்ணாத் தனித்தழல்
நாம் பணிந்தடி போற்று நள்ளாறனே
(10)
இலங்கை மன்னன் இருபது தோளிற
மலங்க மால்வரை மேல்விரல் வைத்தவர்
நலங்கொள் நீற்றர் நள்ளாறரை நாள்தொறும்
வலங்கொள்வார் வினையாயின மாயுமே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page