திருஅழுந்தூர்:

<– சோழ நாடு (காவிரி தென்கரை)

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சம்பந்தர் தேவாரம்):

(1)
தொழுமாறு வல்லார், துயர்தீர நினைந்து
எழுமாறு வல்லார், இசைபாட விம்மி
அழுமாறு வல்லார் அழுந்தை மறையோர்
வழிபாடு செய் மாமட மன்னினையே
(2)
கடலேறிய நஞ்சமுதுண்டவனே
உடலே உயிரே உணர்வே எழிலே
அடலேறுடையாய், அழுந்தை மறையோர்
விடலே தொழ மாமடம் மேவினையே
(3)
கழிகாடலனே கனலாடலினாய்
பழிபாடிலனே அவையே பயிலும்
அழிபாடிலராய் அழுந்தை மறையோர்
வழிபாடு செய் மாமடம் மன்னினையே
(4)
வானே மலையே என் மன்னுயிரே
தானே தொழுவார் தொழுதாள் மணியே
ஆனே சிவனே அழுந்தை அவர்!எம்
மானே என மாமடம் மன்னினையே
(5)
அலையார் புனல்சூழ் அழுந்தைப் பெருமான்
நிலையார் மறியும் நிறைவெண் மழுவும்
இலையார் படையும் இவையேந்து செல்வ
நிலையாவது கொள்கஎன நீ நினையே
(6)
நறவார் தலையில் நயவா உலகில்
பிறவாதவனே பிணிஇல்லவனே
அறையார் கழலாய் அழுந்தை மறையோர்
மறவாதெழ மாமடம் மன்னினையே
(7)
தடுமாறு வல்லாய் தலைவா, மதியம்
சுடுமாறு வல்லாய், சுடரார் சடையில்
அடுமாறு வல்லாய், அழுந்தை மறையோர்
நெடுமா நகர் கைதொழ நின்றனையே
(8)
பெரியாய் சிறியாய் பிறையாய், மிடறு
கரியாய், கரிகாடு உயர்வீடுடையாய்
அரியாய் எளியாய் அழுந்தை மறையோர்
வெரியார் தொழ மாமடம் மேவினையே
(9)
மணிநீள் முடியான் மலையை அரக்கன்
தணியாதெடுத்தான் உடலம் நெரித்த
அணியார் விரலாய் அழுந்தை மறையோர்
பணி மாமடம் மன்னி இருந்தனையே
(10)
முடியார் சடையாய் முனம் நாளிருவர்
நெடியான் மலரான் நிகழ்வால் இவர்கள்
அடிமேல் அறியார் அழுந்தை மறையோர்
படியால் தொழ மாமடம் பற்றினையே
(11)
அருஞானம் வல்லார் அழுந்தை மறையோர்
பெருஞானமுடைப் பெருமான் அவனைத்
திருஞான சம்பந்தன செந்தமிழ்கள்
உருஞானம் உண்டாம் உணர்ந்தார் தமக்கே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page