திருப்பயற்றூர்:

<– சோழ நாடு (காவிரி தென்கரை)

(குறிப்பு: அப்பர் சுவாமிகளால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(அப்பர் தேவாரம்):

(1)
உரித்திட்டார் ஆனையின்தோல் உதிர ஆறொழுகிஓட
விரித்திட்டார் உமையாள் அஞ்சி விரல் விதிர்த்தலக்க நோக்கித்
தரித்திட்டார் சிறிது போது தரிக்கிலராகித் தாமும்
சிரித்திட்டார் எயிறு தோன்றத் திருப்பயற்றூரனாரே
(2)
உவந்திட்டங்குமையோர் பாகம் வைத்தவர் ஊழிஊழி
பவந்திட்ட பரமனார்தாம் மலைசிலை நாகமேற்றிக்
கவர்ந்திட்ட புரங்கள் மூன்றும் கனலெரியாகச் சீறிச்
சிவந்திட்ட கண்ணர் போலும் திருப்பயற்றூரனாரே
(3)
நங்களுக்கருளதென்று நான்மறை ஓதுவார்கள்
தங்களுக்கருளும் எங்கள் தத்துவன், தழலன் தன்னை
எங்களுக்கருள்செய் என்ன நின்றவன், நாகமஞ்சும்
திங்களுக்கருளிச் செய்தார் திருப்பயற்றூரனாரே
(4)
பார்த்தனுக்கருளும் வைத்தார், பாம்பரை ஆட வைத்தார்
சாத்தனை மகனாய் வைத்தார், சாமுண்டி சாம வேதம்
கூத்தொடும் பாட வைத்தார், கோளரா மதிய நல்ல
தீர்த்தமும் சடையில் வைத்தார் திருப்பயற்றூரனாரே
(5)
மூவகை மூவர் போலும், முற்றுமா நெற்றிக் கண்ணர்
நாவகை நாவர் போலும், நான்மறை ஞானமெல்லாம்
ஆவகை ஆவர் போலும், ஆதிரை நாளர் போலும்
தேவர்கள் தேவர் போலும் திருப்பயற்றூரனாரே
(6)
ஞாயிறாய் நமனுமாகி, வருணனாய்ச் சோமனாகித்
தீயறா நிருதிவாயுத் திப்பிய சாந்தனாகிப்
பேயறாக் காட்டிலாடும் பிஞ்ஞகன் எந்தை பெம்மான்
தீயறாக் கையர் போலும் திருப்பயற்றூரனாரே
(7)
ஆவியாய் அவியுமாகி, அருக்கமாய்ப் பெருக்கமாகிப்
பாவியர் பாவம் தீர்க்கும் பரமனாய்ப் பிரமனாகிக்
காவியங் கண்ணளாகிக் கடல்வண்ணமாகி நின்ற
தேவியைப் பாகம் வைத்தார் திருப்பயற்றூரனாரே
(8)
தந்தையாய்த் தாயுமாகித் தரணியாய்த் தரணிஉள்ளார்க்கு
எந்தையும் என்ன நின்ற ஏழுலகுடனுமாகி
எந்தையெம் பிரானே என்றென்றுள்குவார் உள்ளத்தென்றும்
சிந்தையும் சிவமும்ஆவார் திருப்பயற்றூரனாரே
(9)
புலன்களைப் போக நீக்கிப் புந்தியை ஒருங்க வைத்து
இலங்களைப் போக நின்று, இரண்டையும் நீக்கி ஒன்றாய்
மலங்களை மாற்ற வல்லார், மனத்தினுள் போகமாகிச்
சினங்களைக் களைவர் போலும் திருப்பயற்றூரனாரே
(10)
மூர்த்திதன் மலையின் மீது போகாதா முனிந்து நோக்கிப்
பார்த்துத்தான் பூமி மேலால் பாய்ந்துடன் மலையைப் பற்றி
ஆர்த்திட்டான் முடிகள் பத்தும் அடர்த்துநல் அரிவைஅஞ்சத்
தேத்தெத்தா என்னக் கேட்டார் திருப்பயற்றூரனாரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page