திருவிற்குடி வீரட்டம்:

<– சோழ நாடு (காவிரி தென்கரை)

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சம்பந்தர் தேவாரம்):

(1)
வடிகொள் மேனியர், வானமா மதியினர், நதியினர், மதுவார்ந்த
கடிகொள் கொன்றையம் சடையினர் கொடியினர், உடை புலியதள் ஆர்ப்பர்
விடையதேறும் எம்மான் அமர்ந்து இனிதுறை விற்குடி வீரட்டம்
அடியராகி நின்றேத்த வல்லார்தமை அருவினை அடையாவே
(2)
களங்கொள் கொன்றையும் கதிர்விரி மதியமும் கடிகமழ் சடைக்கேற்றி
உளங்கொள் பத்தர்பால் அருளிய பெருமையர், பொருகரி உரிபோர்த்து
விளங்கு மேனியர், எம்பெருமான்உறை விற்குடி வீரட்டம்
வளங்கொள் மாமரால் நினைந்தேத்துவார் வருத்தமதறியாரே
(3)
கரிய கண்டத்தர், வெளிய வெண்பொடியணி மார்பினர், வலங்கையில்
எரியர், புன்சடை இடம்பெறக் காட்டகத்தாடிய வேடத்தர்
விரியும் மாமலர்ப் பொய்கைசூழ் மதுமலி விற்குடி வீரட்டம்
பிரிவிலாதவர் பெருந்தவத்தோர் எனப் பேணுவர் உலகத்தே
(4)
பூதம் சேர்ந்திசை பாடலர், ஆடலர், பொலிதர நலமார்ந்த
பாதம் சேரிணைச் சிலம்பினர், கலம்பெறு கடலெழு விடமுண்டார்
வேதம் ஓதிய நாவுடையான் இடம் விற்குடி வீரட்டம்
சேரு நெஞ்சினர்க்கல்லது உண்டோ பிணி தீவினை கெடுமாறே
(5)
கடிய ஏற்றினர், கனலன மேனியர், அனலெழ ஊர்மூன்றும்
இடிய மால்வரை கால் வளைத்தான், தனதடியவர் மேலுள்ள
வெடிய வல்வினை வீட்டுவிப்பான் உறை விற்குடி வீரட்டம்
படியதாகவே பரவுமின், பரவினால் பற்றறும் அருநோயே
(6)
பெண்ணொர் கூறினர்; பெருமையர்; சிறுமறிக் கையினர்; மெய்யார்ந்த
அண்ணல்; அன்புசெய்வார் அவர்க்கெளியவர், அரியவர் அல்லார்க்கு
விண்ணிலார் பொழில் மல்கிய மலர்விரி விற்குடி வீரட்டம்
எண்ணிலாவிய சிந்தையினார் தமக்கு இடர்கள் வந்தடையாவே
(7)
(8)
இடங்கொள் மாகடல் இலங்கையர் கோன் தனை இகல்அழிதர ஊன்று
திடங்கொள் மால்வரையான், உரைதரு பொருளினன், இருளார்ந்த
விடங்கொள் மாமிடறு உடையவன், உறைபதி விற்குடி வீரட்டம்
தொடங்குமாறு இசைபாடி நின்றார் தமைத்  துன்பநோய் அடையாவே
(9)
செங்கண் மாலொடு நான்முகன் தேடியும் திருவடி அறியாமை
எங்கும் ஆரெரியாகிய இறைவனை, அறைபுனல் முடியார்ந்த
வெங்கண் மால்வரைக் கரியுரித்துகந்தவன், விற்குடி வீரட்டம்
தங்கையால் தொழுதேத்த வல்லாரவர் தவமல்கு குணத்தாரே
(10)
பிண்டமுண்டு உழல்வார்களும், பிரிதுவர் ஆடையர் அவர் வார்த்தை
பண்டு மின்றுமோர் பொருளெனக் கருதன்மின், பரிவுறுவீர் கேண்மின்
விண்ட மாமலர்ச் சடையவன் இடமெனில் விற்குடி வீரட்டம்
கண்டு கொண்டடி காதல் செய்வாரவர் கருத்துறும் குணத்தாரே
(11)
விலங்கலே சிலை இடமென உடையவன், விற்குடி வீரட்டத்து
இலங்கு சோதியை, எம்பெருமான் தனை, எழில்திகழ் கழல்பேணி
நலங்கொள் வார்பொழில் காழியுள் ஞானசம்பந்தன் நற்றமிழ் மாலை
வலங்கொடே இசை மொழியுமின், மொழிந்தக்கால் மற்றது வரமாமே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page