நன்னிலம்:

<– சோழ நாடு (காவிரி தென்கரை)

(குறிப்பு: சுந்தரரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சுந்தரர் தேவாரம்):

(1)
தண்ணியல் வெம்மையினான், தலையில் கடைதோறும்பலி
பண்ணியல் மென்மொழியார்இடம் கொண்டுழல் பண்டரங்கன்
புண்ணிய நான்மறையோர் முறையால்அடி போற்றிசைப்ப
நண்ணிய நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே
(2)
வலங்கிளர் மாதவம்செய் மலை மங்கையொர் பங்கினனாய்ச்
சலங்கிளர் கங்கை தங்கச் சடையொன்றிடையே தரித்தான்
பலங்கிளர் பைம்பொழில்தண் பனிவெண் மதியைத் தடவ
நலங்கிளர் நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே
(3)
கச்சியன், இன்கருப்பூர் விருப்பன், கருதிக் கசிவார்
உச்சியன், பிச்சையுண்ணி உலகங்கள் எல்லாம் உடையான்
நொச்சியம் பச்சிலையான், நுரைதீர் புனலால் தொழுவார்
நச்சிய நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே
(4)
பாடிய நான்மறையான், படுபல் பிணக் காடரங்கா
ஆடிய மாநடத்தான், அடிபோற்றி என்று அன்பினராய்ச்
சூடிய செங்கையினார் பலர்தோத்திரம் வாய்த்தசொல்லி
நாடிய நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே
(5)
பிலந்தரு வாயினொடு பெரிதும்வலி மிக்குடைய
சலந்தரன் ஆகம்இரு பிளவாக்கிய சக்கரம், முன்
நிலந்தரு மாமகள்கோன் நெடுமாற்கு அருள் செய்தபிரான்
நலந்தரு நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே
(6)
வெண்பொடி மேனியினான், கருநீல மணிமிடற்றான்
பெண்படி செஞ்சடையான், பிரமன்சிரம் பீடழித்தான்
பண்புடை நான்மறையோர் பயின்றேத்திப் பல்கால் வணங்கும்
நண்புடை நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே
(7)
தொடைமலி கொன்றை துன்றும் சடையன், சுடர் வெண்மழுவாள்
படைமலி கையன், மெய்யில் பகட்டீருரிப் போர்வையினான்
மடைமலி வண்கமலம் மலர்மேல் மடஅன்னம் மன்னி
நடைமலி நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே
(8)
குளிர்தரு திங்கள்கங்கை குரவோடரக் கூவிளமும்
மிளிர்தரு புன்சடைமேல் உடையான், விடையான், விரைசேர்
தளிர்தரு கோங்கு வேங்கை தட மாதவி சண்பகமும்
நளிர்தரு நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே
(9)
கமர்பயில் வெஞ்சுரத்துக் கடுங்கேழற்பின் கானவனாய்
அமர் பயில்வெய்தி, அருச்சுனற்கருள் செய்த பிரான்
தமர்பயில் தண்விழவில், தகுசைவர் தவத்தின்மிக்க
நமர்பயில் நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே
(10)
கருவரை போல்அரக்கன் கயிலைம் மலைக்கீழ்க் கதற
ஒருவிரலால் அடர்த்தின்னருள் செய்த உமாபதிதான்
திரைபொரு பொன்னி நன்னீர்த் துறைவன் திகழ் செம்பியர்கோன்
நரபதி நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே
(11)
கோடுயர் வெங்களிற்றுத் திகழ் கோச்செங்கணான் செய்கோயில்
நாடிய நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனைச்
சேடியல் சிங்கி தந்தை சடையன் திருவாரூரன்
பாடிய பத்தும் வல்லார் புகுவார் பரலோகத்துளே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page